புதிய தொழிற்பயிற்சி மையங்கள் : அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

தினமலர்  தினமலர்
புதிய தொழிற்பயிற்சி மையங்கள் : அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:'இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறையினருக்கு, முதல்வர் ஸ்டாலின்
உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர்ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:பள்ளி, கல்லுாரிகளில்இளைஞர்களுக்கு தொழில்நெறி வழிகாட்ட வேண்டும். தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப, புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்க வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், புதிய தொழில்நுட்பப் பிரிவுகளை துவக்க வேண்டும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது அரசின் நோக்கம். எனவே, மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

தொழிலாளர் நல வாரியங்களில், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்கள் மீது, விரைந்து தீர்வு காண வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, திறன் பயிற்சி வழங்க வேண்டும். சேவைகளை ஒருங்கிணைத்து, அதிக வேலை வாய்ப்புகளை வழங்க, 'மொபைல் ஆப்'
உருவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து, வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான, 'விர்ச்சுவல் ரியலாட்டி, க்ளவுட், கம்யூட்டிங், 3டி பிரின்டிங், சைபர் செக்யூரிட்டி போன்றவற்றில், திறன் பயிற்சி வழங்க வேண்டும்.
தோட்டக்கலை மற்றும் விவசாயம் சார்ந்த பயிற்சியை, இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

கால்நடை அறிவியல்பல்கலை மற்றும் கால்நடை பராமரிப்பு துறையுடன் இணைந்து, மகளிர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு, நாட்டுக் கோழி மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்து பயிற்சி வழங்கவேண்டும்.வேலைவாய்ப்பு துறையால் பராமரிக்கப்பட்டு வரும், தனியார் வேலைவாய்ப்பு இணையத்தில், கூடுதல் எண்ணிக்கையிலான, வேலைவாய்ப்பு நிறுவனங்களை இணைக்க வேண்டும்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ்,அதிக தொழிலாளர்கள்உள்ள இடங்களில், மருத்துவமனைகளை துவக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், ஆய்வகவசதிகளை உருவாக்க வேண்டும். கூடுதலாகஆயுஷ் மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.இவ்வாறு, முதல்வர் அறிவுரை வழங்கினார்.கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், செயலர் கிர்லோஷ்குமார், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் மற்றம் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மூலக்கதை