கேரள சட்டசபை தேர்தலில் விளையாடிய பாஜ பணம் திருச்சூர் பாணியில் சேலத்திலும் ரூ.4.40 கோடி கொள்ளை: ஒருவர் மூலமாக மட்டுமே ரூ.43 கோடி சப்ளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
கேரள சட்டசபை தேர்தலில் விளையாடிய பாஜ பணம் திருச்சூர் பாணியில் சேலத்திலும் ரூ.4.40 கோடி கொள்ளை: ஒருவர் மூலமாக மட்டுமே ரூ.43 கோடி சப்ளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பாஜ.வின் தேர்தல் செலவுக்காக, ஒருவர் மூலமாக மட்டுமே ரூ.43.5 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பணம் திட்டமிட்டு கொள்ளயைடிக்கப்பட்டு உள்ளது. திருச்சூரில் ரூ.3.5   கோடி கொள்ளையடித்த அதே கும்பல், சேலத்திலும் ரூ.4.40 கோடியை  கொள்ளையடித்து இருக்கிறது. கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி  சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு மறுநாள் பாஜ.வை சேர்ந்த தர்மராஜன்  என்பவர் திருச்சூர், கொடகரை போலீசில் அளித்த புகாரில், தனது டிரைவர் சம்ஜீர்விடம் ரூ.25 லட்சம் பணத்தை கும்பல் ஒன்று காரை வழிமறித்து கொள்ளையடித்து  சென்றுள்ளது என தெரிவித்தார். இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. உண்மையில் அந்த சம்பவம்  ஏப்ரல் 3ம் தேதியே நடந்துள்ளது. காரில் இருந்தது ரூ.25 லட்சம் அல்ல; ரூ.3.5 கோடி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது, பாஜ.வின்  தேர்தல் செலவுக்கு கொண்டு வரப்பட்ட பணம் என்றும், அதை கொள்ளையடித்ததும்  பாஜ.வினர்தான் எனவும் தெரிந்தது. இது தொடர்பாக பெண் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1.49 கோடி பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது பற்றி பாஜ மாநில தலைவர்  சுரேந்திரனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த  வழக்கு தொடர்பாக திருச்சூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியிருப்பதாவது:திருச்சூர்  அருகே ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது பற்றி கேரள பாஜ மாநில தலைவர் சுரேந்திரன், அமைப்பு செயலாளர் கணேசன், திருச்சூர் அலுவலக செயலாளர் கிரீசன் ஆகியோருக்கு  நன்றாக தெரியும் என கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். பாஜ  தலைவர்களுக்கு தெரிந்துதான் கேரளாவுக்கு பணம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதுவரை தர்மராஜன் மட்டுமே கேரளாவுக்கு ரூ.43.5 கோடி பணத்தை கடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ரூ.9.75 கோடி பணம் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கொண்டு  வரப்பட்டது. இதில், ரூ.6.25 கோடி  திருச்சூரில் உள்ள பாஜ தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  மீதியுள்ள ரூ.3.5  கோடிதான் வழியில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு  முன்பு, பெங்களூரில் இருந்து சேலம் வழியாக ரூ.4.40 கோடி பணம் கேரளாவுக்கு  கொண்டு வரப்பட்டது.  ஆனால், வரும் வழியில் சேலத்தில் மார்ச் 6ம் தேதி அது கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும்  செய்யப்படவில்லை. தேர்தலுக்கு  3 நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடந்துள்ள போதிலும், தேர்தல் முடிந்த  மறுநாள்தான் புகார் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பே புகார் செய்தால்  சிக்கலாகி விடும் என்றுதான் இவ்வாறு செய்துள்ளனர். இவ்வாறு  குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.காரில் ரகசிய அறை  பாஜ.வினர்  தேர்தல் செலவுக்காக பணத்தை ெகாண்டு செல்வதற்காக சிறப்பாக  வடிவமைக்கப்பட்ட  கார் ஒன்றை பயன்படுத்தி உள்ளனர். அதில், இருக்கைக்கு  அடியில் அமைக்கப்பட்ட ரகசிய அறையில் பணத்தை வைத்து கடத்தி உள்ளனர். இந்த அறை எளிதில் யார் கண்ணுக்கும் தெரியாது.  சுவிட்ச்  போட்டால் மட்டுமே அது திறக்கும். இதற்காக, ரூ.3 லட்சம் செலவு   செய்துள்ளனர் எனவும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர்.

மூலக்கதை