மீண்டும் மேல்சபை? ஸ்டாலின் மும்முரம்

தினமலர்  தினமலர்
மீண்டும் மேல்சபை? ஸ்டாலின் மும்முரம்

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழாவை ஒட்டி, மேல்சபையை மீண்டும் கொண்டு வருவதற்குரிய முயற்சியில், அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில், சட்ட மேல்சபைஏற்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு, பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக,தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, அடுத்த மாதம், ௨ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.இதற்காக, டில்லியில் அவரை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், ௨ம் தேதி தமிழகம் வருகிறார்.அதையொட்டி, சட்ட சபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு, மதுரையில் கருணாநிதி நுாலகத்திற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.



ஒப்புதல் கிடைத்தது



அதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க உள்ளது. அதில், சட்ட மேல்சபை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றினால் பொருத்தமாக இருக்கும் என, அரசு தரப்பில் கருதப்படுகிறது.அதற்கு முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, அதில் மேல்சபையை மீண்டும் கொண்டு வருவதற்குஒப்புதல் பெறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றவும், அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், சட்ட மேல்சபை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். 1989ல் தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில், மேல்சபைக்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விடுதலை புலிகள் விவகாரம் தொடர்பாக தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டதால், அத்தீர்மானம் நிறைவேறவில்லை. 2006ல், தி.மு.க., ஆட்சியில் சட்டசபையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்தியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசு இருந்ததால், லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளிலும், அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

கலைக்கப்பட்டது



ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மேல்சபை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. மேல்சபை தீர்மானத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார்.கடந்த 1986ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி யில் தான், மேல்சபை கலைக்கப்பட்டது.அதனால், மேல்சபையை மீண்டும் கொண்டு வர, ஜெயலலிதா விரும்பவில்லை.கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியும், அப்போதைய அரசியல் சூழலால், மேல்சபையை கொண்டு வர முடியவில்லை.
தற்போது கருணாநிதி கனவை, முதல்வர் ஸ்டாலின் நனவாக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.இத்தீர்மானத்திற்கான கோப்புகள் தயாராகவும், டில்லிக்கு அனுப்பி வைக்கவும் கால தாமதமாகும் என்பதால், பார்லிமென்டின் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில், அத்தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை.

உறுப்பினர்கள் தேர்வு



அடுத்த குளிர்கால கூட்டத் தொடரில், இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அடுத்த ஆண்டு மேல்சபை வர வாய்ப்பு உள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதி, ஆசிரியர்கள் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி, கவர்னர் பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அனைத்து உறுப்பினர்களுக்கும், ஒரே மாதிரியாக பதவிக் காலம் இருக்காது. உறுப்பினர்களுக்கு ஆறாண்டு, மூன்றாண்டு, இரண்டாண்டு என பதவிக்காலம் கிடைக்கும்.சட்ட மேல்சபை உறுப்பினராக இருப்பவர்கள், அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஆர்.எம்.வீரப்பன் மேல்சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பின் அமைச்சர் ஆக்கப்பட்ட முன்னுதாரணம் இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

மூலக்கதை