உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உருமாறிய வைரஸ் ஆபத்தால் 2 ‘டோஸ்’ போட்டவர்களுக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியம்: டிசம்பருக்குள் வந்துவிடும்; எய்ம்ஸ் தலைவர் தகவல்

புதுடெல்லி: உருமாறிய வைரசால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும், அது டிசம்பருக்குள் வந்துவிடும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிட்டதிட்ட 42 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை குறித்த கவலைகளும் தொடர்கின்றன.

இந்நிலையில்  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  ‘சார்ஸ்-கோவ்-2ன் உருமாறிய வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதால், எதிர்காலத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

அதனால், பூஸ்டர் தடுப்பூசி டோஸ் போட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதால், வெவ்வேறு வகையான உருமாறிய வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தமட்டில், அவை இரண்டாவது தலைமுறை தடுப்பூசியாக இருக்கும்.

அது, உருமாறிய வைரசில் இருந்து நம்மை பாதுகாப்பது மற்றுமின்றி ஒட்டுமொத்த செயல்திறனையும் அதிகரிக்கும். பூஸ்டர் தடுப்பூசி போடுதல் குறித்து பல நாடுகள் ஆய்வுகளை செய்து வருகின்றன.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால், இந்தியாவை பொறுத்தமட்டில் அனைத்து  மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டிய நிலை ஏற்படும்.



குழந்தைகளுக்கான தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் நடந்து வரும் நிலையில், அதன் முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்.

குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவகையில் மூன்று நிலைகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, ​​2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சோதனைகள் நடந்து வருகின்றன.

அதேபோல், அகமதாபாத்தில் உள்ள மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா, குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அவர்கள் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

வரும் சில வாரங்களில் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும்.

18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டது போல், பல கட்டங்களாக தடுப்பூசி போடப்படும். டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வசதியாக அமெரிக்காவின் மாடர்னா மற்றும் ஃபைசருடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்னும், இறுதி செய்யப்படவில்லை’ என்றார்.


.

மூலக்கதை