வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுடெல்லி: வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டத்தை தொடங்கின. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த  தீர்வும் எட்டப்படாத நிலையில், இப்பிரச்னையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினமும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால், விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

அதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்ட களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்றினர்.

அதன்படி, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தினமும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இன்றைய போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து, பஸ்கள் மூலம் டெல்லி ஜந்தர் மந்தருக்கு இன்று காலை 10. 30 மணிக்கு விவசாயிகள் வந்தனர்.

ஜந்தர் மந்தரில் உள்ள தேவாலயத்தின் பக்கத்தில் அமர்ந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளின் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

போராட்ட களத்திற்கு வந்த அனைத்து விவசாயிகளின் அடையாள அட்டைகளை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, யுனைடெட் கிசான் மோர்ச்சா தலைவர்கள் கூறுகையில், ‘வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய குழுக்களும் டெல்லிக்கு வந்து பேராட்டத்தில் பங்கேற்கும். இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, போராட்டம் நடத்தப்படும்.

அதிகபட்சமாக 200 விவசாயிகள் மட்டும் கொரோனா விதிகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா நாளைய போராட்டத்தில் பங்கேற்பார்’ என்றார்.

இதுகுறித்து டெல்லியின் கூடுதல் டிசிபி அனிதா ராய் கூறுகையில், ‘டெல்லி செங்கோட்டையில் மூன்று ஷிப்ட்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டை வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் போன்ற தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 360 டிகிரி கண்காணிப்பு தவிர விமானப்படை, டிஆர்டிஓ, என்எஸ்ஜி ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

.

மூலக்கதை