ஜெ., பல்கலை விவகாரம்: அ.தி.மு.க., கொந்தளிப்பு!

தினமலர்  தினமலர்
ஜெ., பல்கலை விவகாரம்: அ.தி.மு.க., கொந்தளிப்பு!

'விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட, ஜெ., பல்கலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து, முழுமையாக செயல்பட அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் வழக்கு போட்டுள்ளார்.

சூட்சுமம்



இது குறித்து, கடலுார் மத்திய மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., மாணவர் அணி செயலர் சங்கர் கூறியதாவது:முன்னாள் அமைச்சர்சண்முகம் முயற்சியால், 2020 செப்., 16ல் சிறப்பு சட்டம் மூலம் ஜெ., பல்கலை அறிவிப்பு வெளியானது. வேலுாரில் இயங்கி வரும் திருவள்ளூர் பல்கலை, இரண்டாக பிரிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. உடனடியாக, ஜெ., பல்கலைக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டார். பல்கலை அமைப்பதற்காக, விழுப்புரம், செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

கட்டுமான பணி துவங்காத நிலையில், விழுப்புரத்தில் இருக்கும் பழைய தாலுகா அலுவலகத்தில், பல்கலை அலுவலகம் இயங்கி வந்தது. பல்கலைக்கு தேவையான அலுவலர்களும், ஊழியர்களும் இதுவரை நியமிக்கப்படவில்லை. 'பல்கலையை முழுமையாக இயங்க வைக்கும் வேலையைச் செய்யுங்கள்' என, அரசுக்கு வலியுறுத்தினோம். ஆனால், அரசு வேறு எண்ணத்தில் செயல்படுகிறது. இந்த பல்கலை செயல்பட கூடாது என, திட்டமிடுகின்றனர்.உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதில் முனைப்பாக இருக்கிறார். திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், அப்பல்கலையின் முதுநிலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது சட்ட விரோதமானது. இதன்பின் தான், ஆட்சியாளர்களின் கெட்ட எண்ணம் வெளிப்பட்டது. திருவள்ளூர் பல்கலையை பிரித்துத் தான், விழுப்புரத்தில், ஜெ., பல்கலை அமைக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, விழுப்புரத்தில் இருந்து, அந்தப் படிப்புகளுக்கு, ஜெ., பல்கலை சார்பில் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், திருவள்ளூர் பல்கலைக்காக அறிவிப்பு வெளியிட்டதில் தான் சூட்சுமம் இருக்கிறது.


ஜெ., பல்கலை உருவான பின், அதனுடன் இணைக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து, மாணவர் சேர்க்கை கூடாது. அதைச் செய்யும்போதே கெட்ட எண்ணம் தெரிகிறதே!அதுமட்டுமல்ல, அண்ணாமலை பல்கலை நிர்வாக அதிகாரி, பல்கலையை தன்னாட்சி அதிகாரத்தில் இருந்து, இணைப்பு அங்கீகாரம் பெறும் பல்கலையாக மாற்ற வேண்டும் என்று, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். தற்போது, அப்பல்கலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அதை இணைப்பு அங்கீகாரம் பெற்ற பல்கலையாக மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது என்றும் பொன்முடி கூறியுள்ளார். அதற்காக, அப்பல்கலையின் கீழ் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் கல்லுாரிகள் இணைக்கப்படும் என்றும், பொன்முடி தெரிவித்துள்ளார்.

போராட்டம்



ஜெ., பல்கலையின் எல்லைக்குள் கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் இருக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை, அண்ணாமலை பல்கலைக்குள் கொண்டு செல்வோம் என்று அறிவிப்பது, ஜெ., பல்கலை நிரந்தரமாக மூடப்படும் என்பதை, மறைமுகமாக அறிவிப்பது போலத்தான்.ஜெ., பெயர் இருந்தால், அதை தி.மு.க.,வினர் ஏற்க மாட்டார்கள். அதற்காகவே, நொண்டி சாக்கு கூறி, மூட முடிவெடுத்து விட்டனர். காலப்போக்கில், 'அம்மா' உணவகம், 'அம்மா மினி கிளினிக்' ஆகியவற்றுக்கும், இதே நிலை தான் ஏற்படும். ஜெ., பல்கலை கட்டாயம் இயங்க வேண்டும். இல்லையென்றால், அ.தி.மு.க., சார்பில் மக்களை திரட்டி, தமிழகம் முழுக்க போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். தலைமை உத்தரவுக்கு பின், இது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் --

மூலக்கதை