இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாவில் முதன்முறையாக பறவை காய்ச்சலுக்கு அரியானா சிறுவன் பலி: தேசிய வைராலஜி நிறுவன ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் முதன் முறையாக இந்தாண்டு பறவைக் காய்ச்சல் தொற்றால் 11 வயது சிறுவன் அரியானாவில் உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. அரியானாவை சேர்ந்த 11 வயது சிறுவன் கடந்த 2ம் தேதி நிமோனியா மற்றும் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.   அவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருந்ததால், அவர் இறந்ததாக டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இந்தியா கழகம் (எய்ம்ஸ்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் நிறுவனம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ‘பறவை காய்ச்சல் எனப்படும் எச்5என்1 வைரஸ் தொற்றால், அரியானா சிறுவன் இறந்துள்ளார். இந்தியாவில் எச்5என்1 தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த ஆண்டு ஏற்பட்டு முதல் மரணமாகும்.



புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (என். ஐ. வி) அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அந்த சிறுவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு நெகடிவ் என்று வந்தது.

ஆனால், எச்5 என்1 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனால், அவருடன் தொடர்பு கொண்ட மருத்துவமனை ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முன்னதாக இறந்த சிறுவனின் கிராமத்திற்கு  எச்5 என்1 தொற்று தடமறிதல் குறித்து ஆய்வு செய்ய தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய குழு அரியானா சென்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அரியானா உட்பட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்தன.

அதனால், கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்பட்டா ஆயிரக்கணக்கான கோழிகள், வாத்துகள் கொல்லப்பட்டன. பறவைகள் இறப்பதற்கான காரணம், எச்5 என் 8 வைரஸ் என்று வல்லுநர்கள் கூறினர்.

ஆயினும்கூட, ஜனவரி மாத இறுதியில் மகாராஷ்டிரா, குஜராத், சட்டீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது தொடர்பாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை