காங்கிரஸ் குழுவில் இரு அவையிலும் அதிரடி மாற்றம்; நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: மாலையில் மோடி, சோனியா தலைமையில் தனித்தனி கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் குழுவில் இரு அவையிலும் அதிரடி மாற்றம்; நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது: மாலையில் மோடி, சோனியா தலைமையில் தனித்தனி கூட்டம்

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை மோடி, சோனியா தலைமையில் தனித்தனியாக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இரு அவையிலும் அதிரடி மாற்றம் செய்து சோனியா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு  உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.   முன்னதாக இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

அதேபோல், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று மாலை 6 மணிக்கு காங்கிரஸ் மக்களவை எம்பிக்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை, பணவீக்கம், விவசாயிகள் போராட்டம், வேலையின்மை, ரபேல் ஒப்பந்தம் குறித்த ஜேபிசி விசாரணை, சீனாவுடனான எல்லை பிரச்னை போன்ற விஷயங்களில் ஒன்றிய அரசின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடாளுமன்ற இரு அவைகளுக்கான காங்கிரஸ் குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மக்களவை கட்சித் தலைவராக ஆதர் ரஞ்சன் சவுத்ரி நீடிப்பார்.

மக்களவை குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில், கவுரவ் கோகாய், மணீஷ் திவாரி, கே. சுரேஷ், மாணிக்கம் தாகூர், சசி தரூர், ரவ்னீத் பிட்டு ஆகியோர் காங்கிரஸ் சார்பில் பேசுவார். மாநிலங்களவையில், கே. சி. வேணுகோபால் தலைமையில், அவையின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே  ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், பி. சிதம்பரம் ஆகியோர் செயல்படுவர்.

தேவைப்படும் நேரத்தில் நாடாளுமன்ற  கூட்டுக் கூட்டங்களை கூட்டுவதற்கு மல்லிகார்ஜுன் கார்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை கோரி வருவதால், எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க வசதியாக, அதன் பொறுப்பை மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, கோவிட் தவறான மேலாண்மை, சீனாவுடனான எல்லை பிரச்சினை போன்ற பிரச்னைகளை காங்கிரஸ் கட்சி எழுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை