இலக்குகளை அடைய ஒத்துழையுங்கள்: முதல்வர் வேண்டுகோள்

தினமலர்  தினமலர்
இலக்குகளை அடைய ஒத்துழையுங்கள்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை :''மகசூல் பெருக்கம், குறையாத தண்ணீர், உயர்தரக் கல்வி, உயர்தர மருத்துவம் உட்பட ஏழு இலக்குகளை, 10 ஆண்டு காலத்தில் எட்டிட, மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்பு, அரசுக்கு அவசியம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.புதிதாக பொறுப்பேற்க உள்ள மாவட்ட கலெக்டர்களுடன், தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, அவர் பேசியதாவது:கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை, மேலும் குறைத்திட வேண்டும். அரசு சார்பில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளோம்.

ஆக்சிஜன் தட்டுப்பாடில்லை



படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.கல்வியில், வேலைவாய்ப்பில், சமூக பொறுப்புகளில், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க, மாவட்ட கலெக்டர்கள் தங்கள் அதிகாரத்தை, பதவியை பயன்படுத்தி, தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்.வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு; மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி; குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்; அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்; எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்.

கவனச் சிதறல்கள்



உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம்; அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய ஏழு இலக்குகளை, ௧௦ ஆண்டு காலத்தில் எட்டிட, மாவட்ட கலெக்டர்களின் ஒத்துழைப்பு, அரசுக்கு அவசியம்.பொது வினியோக திட்டத்தை, முறையாக செயல்படுத்திட வேண்டும். அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திட வேண்டும். போலி அட்டைகளை ஒழித்திட வேண்டும். வழங்கப்படும் உணவு பொருட்கள், சுத்தமானதாக, தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, கவனச் சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளை, தங்களது இலக்குகளாக கொள்ள வேண்டும்.நகர்ப்புற வளர்ச்சியும், ஊரக வளர்ச்சியும் தான், நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். காலிப் பணியிடங்களை, தகுதியானவர்களை வைத்து நிரப்பிட வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்து, திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

வளம் மிகுந்த தமிழகம்



மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளோடு, மாவட்ட கலெக்டர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தமிழக அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல. மாவட்ட கலெக்டர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும், கருத்துக்களையும், காது கொடுத்து கேட்கும் அரசு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி, வளம் மிகுந்த தமிழகத்தை உருவாக்குவோம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.கூட்டத்தில், தலைமை செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஸ்டாலின் நாளை டில்லி பயணம்



பிரதமரை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேச உள்ளார். அதற்காக நாளை காலை, 7:20 மணிக்கு, தனி விமானத்தில்டில்லி செல்கிறார். அங்கிருந்து, தமிழ்நாடு அரசு இல்லம் செல்லும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை, 5:00 மணிக்கு, பிரதமரை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக அரசு சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் அளிக்கிறார். அத்துடன், அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களில் நடந்த, பல்வேறு ஊழல் தொடர்பான பட்டியலை
யும், பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி.,க்கள் டில்லி புறப்பட்டுச் சென்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் தியாகராஜன், சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் செல்ல உள்ளனர்.பிரதமரை சந்தித்த பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், முதல்வர் சந்தித்து பேச உள்ளார். மறுநாள் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை