திரிணமுல் காங்., தலைவர்கள் மருத்துவமனையில் தஞ்சம்

தினமலர்  தினமலர்
திரிணமுல் காங்., தலைவர்கள் மருத்துவமனையில் தஞ்சம்

கோல்கட்டா :'நாரதா' ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ., உட்பட நான்கு பேரில் மூன்று பேர், உடல்நிலை சரியில்லை என கூறி, மருத்துவமனையில் சேர்ந்தனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. இங்கு, 2014ல் திரிணமுல் காங்., ஆட்சியின் போது, 'நாரதா நியூஸ்' என்ற செய்தி இணையதளம், அரசின் ஊழலை அம்பலப்படுத்தியது.அந்த இணையதளம் நடத்திய ரகசிய நடவடிக்கையில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சிக்கினர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக, தற்போது அமைச்சர்களாக உள்ள பிர்ஹத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ., மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இதையடுத்து, சி.பி.ஐ., அலுவலகத்துக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மாநிலம் முழுதும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வருக்கும் கோல்கட்டா சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் மாலை 'ஜாமின்' வழங்கியது. ஆனால் சில மணி நேரத்தில், கோல்கட்டா உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்தது.இதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பிர்ஹத் ஹகீம் தவிர மற்ற மூவரும், 'உடல்நிலை சரியில்லை' என கூறியதால், நேற்று அதிகாலையில் கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுவேந்து அதிகாரி கைது எப்போது?



'திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த மூத்த தலைவர்கள் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோரை, நாரதா வழக்கில் கைது செய்யாதது ஏன்?' என,
திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பினர். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் வென்றவர், சுவேந்து அதிகாரி. தற்போது மாநில எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

இது குறித்து சி.பி.ஐ., உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:இந்த வழக்கு பதிவு செய்தபோது, லோக்சபா எம்.பி.,க்களாக இருந்த சுவேந்து அதிகாரி, சுகதா ராய், பிரசுன் பானர்ஜி, காகாலி கோஷ் தஸ்திதார் ஆகியோரை கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி, லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முகுல் ராய், இந்தப் பட்டியலில் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை