பிரதமரை அவமதிக்க தகவல்: காங்கிரஸ் மீது புகார்

தினமலர்  தினமலர்
பிரதமரை அவமதிக்க தகவல்: காங்கிரஸ் மீது புகார்

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில், சமூக வலை தளத்தில் பிரசாரம் செய்வதற்காக, 'டூல்கிட்' எனப்படும் தகவல் தொகுப்பை காங்., உருவாக்கியுள்ளதாக பா.ஜ., புகார் கூறியுள்ளது.

மருந்து தட்டுப்பாடு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நிலைமையை எதிர்கொள்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பல எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர்நரேந்திர மோடியின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகை யிலும், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப் பெயரை ஏற்படுத்தவும், காங்., சதி திட்டம் தீட்டியுள்ளதாக பா.ஜ., கூறியுள்ளது.இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் பொய் பிரசாரம் செய்வதற்காக, டூல்கிட் ஒன்றை காங்., உருவாக்கியுள்ளதாக பா.ஜ., கூறியுள்ளது.இந்த டூல்கிட்டை இணைத்து, பலர் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது மிக வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் சாம்பித் பத்ரா கூறியுள்ளதாவது:கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் அரசுக்கு உதவியாக, ஆதரவாக இல்லாமல், அரசியல் லாபம் தேடுவதில், ராகுல் ஈடுபட்டு உள்ளார். பிரதமர் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தவும், சர்வதேச அளவில் நம் நாட்டின் பெயருக்கு அவப் பெயரை ஏற்படுத்தவும், டூல்கிட்டை காங்., உருவாக்கியுள்ளது.

'இந்திய கொரோனா, மோடி உருமாறிய கொரோனா பரவலை அதிகரித்த கும்பமேளா' போன்ற பெயர்களில் பதிவுகளை வெளியிடும்படி, அந்த டூல்கிட்டில் தங்கள் கட்சியினரை காங்., கேட்டுக் கொண்டு உள்ளது.மேலும், வெளிநாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை மோடிக்கு எதிராகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபடும்படியும் கூறப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

ஹிந்துகளின் கும்பமேளாவை குறிப்பிடும் அதே நேரத்தில், முஸ்லிம்களின் ரம்ஜான் குறித்து எதையும் குறிப்பிட்டு விடக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு காங்., அறிவுறுத்தியுள்ளது. தங்கள் பதிவின்போது கொரோனாவில் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்வது போன்ற சித்தரிக்கப்பட்ட படங்களை பயன்படுத்தும்படியும், டூல்கிட்டில் கூறப்பட்டு உள்ளது.

இளைஞர் காங்., தொண்டர்களை, மருத்துவமனைகளில் குறிப்பிட்ட படுக்கைகளை தங்கள் வசம் வைத்திருக்கும்படியும், தங்கள் இணையதளத்தில் கேட்பவர்களுக்கு அந்த இடங்களை தரும்படியும் கூறப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக முன்களப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்படும் நேரத்தில், இந்த பெருந்தொற்றையும் அரசியலாக்க காங்.,கும், ராகுலும் முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை காங்., மறுத்துள்ளது. ''இதுபோன்று எந்த ஒரு, டூல்கிட்டையும் நாங்கள் உருவாக்க வில்லை. பா.ஜ.,வே ஒரு போலியானதை உருவாக்கி, எங்கள் மீது பழி போடுகிறது. இது குறித்து புகார் கூற உள்ளோம்,'' என, காங்., மூத்த தலைவர் ராஜீவ் கவுடா கூறியுள்ளார்.

மூலக்கதை