தடுப்பூசி இடைவெளி அதிகரிப்பால் பாதிப்பில்லை

தினமலர்  தினமலர்
தடுப்பூசி இடைவெளி அதிகரிப்பால் பாதிப்பில்லை

புதுடில்லி:'கொரோனாவுக்கு எதிரான, 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது, 'டோஸ்' இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதால், எந்த பாதிப்பும் ஏற்படாது; ஆறு மாதத்துக்குள், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் கவலையடைய தேவையில்லை' என, நோய் தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. தொற்றுக்கு எதிராக, 'கோவிஷீல்டு, கோவாக்சின்' ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவரும் இரண்டு முறை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி, முதலில், 4 - 6 ஆறு வாரங்கள் வரை இருந்தது.
இடைவெளியை அதிகரிப்பது நோய் தடுப்பில் பயனளிப்பதாக தெரிந்ததால், இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளி, எட்டு வாரம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைப்பட்ட காலத்தை, 12 - 16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரைத்தது. அதை மத்திய அரசு ஏற்று, கால இடைவெளியை கடந்த வாரம் அதிகரித்தது.

'மத்திய அரசின் இந்த கால நீட்டிப்பு, தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. இடைவெளி அதிகமானால் தடுப்பூசியின் வீரியம் குறையும்' என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.இதை நோய் தடுப்பு நிபுணர்கள் மறுத்துள்ளனர். இது பற்றி, தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியதாவது:
இந்தியா ஒரு பெரிய நாடு. மிகவும் கடினமான சூழலில் இருக்கும்போது, முடிந்தவரை விரைவாக தடுப்பூசி போடுவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். போதுமான தடுப்பூசிகள் இல்லாததை மூடி மறைக்கத்தான், கால இடைவெளி நீட்டிப்பு என கூறுவது தவறு; இது நியாயமான அணுகுமுறை.இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெறுவதை நீண்ட காலம் தாமதப்படுத்துவது, தடுப்பூசியின் செயல்திறனில், எந்த ஒரு எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தாது.
ஆறு மாதம் வரை தடுப்பூசியின் பலன், உடலில் இருக்கும். அதனால், ஆறு மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டாலும், நல்ல பலன் கிடைக்கும்.அதனால், ஒரு மாத இடைவெளிக்குள் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என அவசியமில்லை.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வைரஸ் பரவல் குறைந்த நிலையில் தான், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை உடைய நாட்டில், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது, பெரும் சவால் நிறைந்த பணி.கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இடைவெளியை அதிகரிப்பது பற்றி, நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதிப்பு குறைவு!



மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 1.8 சதவீதம் பேர் மட்டுமே, இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் தற்போது குறையத் துவங்கியுள்ளது.
மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, பீஹார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பாதிப்பு குறைந்து வருகிறது. 199 மாவட்டங்களில், கடந்த இரண்டு வாரங்களாக பாதிப்பு குறையத் துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை