இது உங்கள் இடம்: காலம் பதில் சொல்லும்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: காலம் பதில் சொல்லும்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய அரசு பதவியேற்று, ஆறு மாதங்கள் கழித்து தான், அதன் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்குள், அவசரப்படக் கூடாது. முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினின் முதல் கடமை, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தான். அதற்கான ஏற்பாடு குறித்து, பதவியேற்கும் முன்பே அவர், அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதன் வழியாக அவர், கொரோனா விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார் என்பது புரிகிறது.

தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டதேர்தல் வாக்குறுதிகளையும், அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, 'பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது, 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன்' என, அவர் உறுதிமொழி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். கடந்த முறை, தி.மு.க., ஆட்சியின்போது, மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. எனவே, இம்முறை அந்த பிரச்னை எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை, ஸ்டாலினுக்கு இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., ஆகியோர் வாழ்த்து தெரிவித்ததும், அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததும், நாகரிக அரசியலுக்கு நல்ல ஆரம்பம். பா.ஜ., வேறு; மத்திய அரசு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணக்கத்தைக் கடைபிடித்தால், தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். மத்திய அரசும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக் கூடாது. தி.மு.க., அரசின் முன், நிறைய சவால்கள் காத்திருக்கினன்றன.


தமிழக அரசின் கடன் சுமையை குறைத்தல்; வேலைவாய்ப்பு அதிகப்படுத்துதல்; மதுவிலக்கை நோக்கி பயணப்படுதல்; பாலியல் குற்றம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல் மற்றும் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். பேரிடரை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்திற்கு, தி.மு.க., அரசு உத்தர வாதம் அளிக்கும் விதமாக, அரசு நிர்வாகத்தில், அரசியல்வாதிகள் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் தலைமையில், தமிழகம் வீறு நடை போடுமா? காலம் பதில் சொல்லும்!

மூலக்கதை