கமலின் கட்சி முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

தினமலர்  தினமலர்

சென்னை : 'தோல்விக்கு பின் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை; மாறுவார் என்ற நம்பிக்கையுமில்லை' எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.


நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய கமல் கூட வெற்றி பெற முடியாத நிலையில், மொத்த கூடாரமும் காலியாகத் தொடங்கியுள்ளது.
தன் ராஜினாமா குறித்து மகேந்திரன் கூறியதாவது: கட்சியின் பெரிய தோல்விக்கு பிறகும், கமல் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல் மீண்டும் நம்மவராக செயல்பட வேண்டும்.
தமிழகத்தைச் சீரமைப்பதைக் காட்டிலும், முதலில் கட்சியைச் சீரமைப்பது அவசியம். இவ்வளவு பெரிய தோல்விக்கு பிறகும், கமலைச் சுற்றியுள்ள முகஸ்துதி கூட்டம், கட்சியைப் பிளவு படுத்தும் நடவடிக்கையிலேயே தீவிரமாக உள்ளது. கமலும் அவரை மாற்றிக் கொள்ளவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முக்கிய நிர்வாகிகள் விலகலை அடுத்து, ம.நீ.ம., ஊடகப்பிரிவு சார்பில் வெளியான அறிக்கை:
கட்சியின் நிர்வாக குழு கூட்டம், தலைவர் கமல் தலைமையில் நடந்தது. கட்சியை வலுப்படுத் துதல், மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகக்குழு உறுப்பினர்களான மகேந்திரன், முருகானந்தம், மவுரியா, தங்கவேல், உமாதேவி, குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதை ஏற்பதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும், தலைவர் கமல் முடிவு செய்யட்டும் என, நிர்வாகிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

துணை தலைவர் பொன்ராஜ் கூறுகையில், ''தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சியைச் சீரமைக்க, முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். அதன் மீதான முடிவை கமலே எடுப்பார்,'' என்றார்.

'களையெடுக்கப்பட வேண்டியவர் தான்'



'மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம். களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்.கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பலரை தலையெடுக்க விடாமல் தடுத்ததே இவரது சாதனை. தன்னை எப்படியும் நீக்கி விடுவர் என்பதை அறிந்தே புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்.கோழைகளை நாம்பொருட்படுத்த வேண்டியதில்லை. மண், மொழி காக்க களத்தில் நிற்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை