அவசர பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
அவசர பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:'மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, அவசர பயன்பாட்டிற்கு, உபரியான ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கொரோனா சிகிச்சை தொடர்பாக தாமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. வசிப்பிடச் சான்றிதழ்இந்த வழக்கில், நேற்று அமர்வு பிறப்பித்தஉத்தரவு:கொரோனா இரண்டாவது அலை, தேசிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் இருந்து மக்களை காக்க வேண்டிய இமாலய பொறுப்பு, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள், அவசர கால பயன்பாட்டிற்கு என, உபரியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

எதிர்பாராத தேவையின் போது, அவற்றை பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரே இடத்தில் வைக்காமல், பரவலாக, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பும் வசதி உள்ள இடங்களில் இருப்பு வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இருப்பு குறைவதற்கு ஏற்ப, உடனடி யாக ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்ப வேண்டும். இதையும், தினசரி ஒதுக்கீட்டையும், ஒவ்வொரு மாநிலமும், இணையம் வாயிலாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அரசு, இரு வாரங்களில், தேசிய கொள்கையை அறிவிக்க வேண்டும். அதுவரை, எந்தவொரு நோயாளிக்கும், வசிப்பிடச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை இல்லாத பட்சத்திலும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. சுதந்திரம்கொரோனா சிகிச்சை தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் புகார்களை முடக்கவோ அல்லது மருத்துவ உதவி கோருவோரை துன்புறுத்தவோ கூடாது.

அவ்வாறு செய்வோர் மீது நீதிமன்றம், கடும் நடவடிக்கை எடுக்கும். இதை, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு, மத்திய, மாநில அரசுகள், தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவின் நகலை, அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும், உச்ச நீதிமன்ற பதிவாளர் அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:கொரோனா தடுப்பூசி மருந்தை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே விலை வித்தியாசம் உள்ளது. இது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு எதிராக உள்ளது. அத்துடன், தனிநபர் வாழ்வுரிமை, சுதந்திரம் ஆகியவற்றையும் பாதிக்கிறது. எனவே, தடுப்பூசி மருந்து கொள்கை குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை