ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் உத்தரகாண்டில் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
ரூ.18,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் உத்தரகாண்டில் பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.18,000 கோடி வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாஜவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ.18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா டேராடூனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.15,728 கோடிக்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் கீழ் ரூ.8,300 கோடியில் டெல்லி-டேராடூன் இடையே விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம்,  இந்த நகரங்கள் இடையே உள்ள 248 கிமீ தூரம் 180 கிமீ ஆக சுருங்குவதோடு பயண நேரமும் மிச்சமாகும். இதுதவிர, நீர் மின் நிலையம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்து, ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களின் மாதிரி வடிவமைப்புகளை மோடி பார்வையிட்டார். இதையடுத்து, டேராடூன் பரேட் மைதானத்தில் பாஜவின் தேர்தல் பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், ‘‘கடந்த 5 மாதத்தில் உத்தரகாண்்டில் ரூ.1 லட்சம் கோடிக்கான வளர்ச்சிப் பணிகளை ஒன்றிய அரசு செய்துள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சிகள் உத்தரகாண்டை உதாசீனப்படுத்தின. கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014 வரை இம்மாநிலத்தில் ரூ.600 கோடியில் 288 கிமீ மட்டுமே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. பாஜ ஆட்சி அமைந்த பிறகு கடந்த 7 ஆண்டில் ரூ.12,000 கோடியில் 2000 கிமீ சாலை போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இதனால்,உத்தரகாண்டில் சுற்றுலா வளரும்,’’ என்றார்.

மூலக்கதை