5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு

  தமிழ் முரசு
5ம் தேதி வரை கனமழை தொடரும்: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவு

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சில இடங்களில் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், விடுமுறை என தெரிந்ததும் வீடுகளுக்கு திரும்பினர்.
இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

இதனால் அந்த மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூர் கொத்தவாச்சேரியில் 150 மிமீ, சேத்தியாதோப்பு, பாண்டவையார் பகுதிகளில் தலா 90 மிமீ, திருத்துறைப்பூண்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டையில் தலா 70 மிமீ, புவனகிரி, சோழவரம், சிதம்பரம், குலசேகரப்பட்டினம், இரணியல் பகுதிகளில் தலா 60 மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாகவே மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை- காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வரும் 5ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழகம் முழுவதும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். அவர்களுக்கு, அமைச்சர்கள், எம். எல்ஏ. க்கள் மற்றும் கலெக்டர்கள், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்றிரவு முதல் விடியவிடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் மழைநீர் தேங்கியதாலும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



சென்னை நகரில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், மதுரவாயல், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலைநகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்த தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சில இடங்களில் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், விடுமுறை என தெரிந்ததும் வீடுகளுக்கு திரும்பினர்.

.

மூலக்கதை