லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
லக்கிம்பூர் வன்முறையை 23 பேர்தான் பார்த்தார்களா?.. உ.பி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இவ்வழக்கில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என். வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘உத்திரபிரதேச மாநில அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் கரிமா பிரசாத் ஆஜரானார்.

அப்போது அவர், ‘இவ்வழக்கில் பலரது வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.

நேற்று மட்டும் ஏழு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

மொத்தமுள்ள 69 சாட்சியங்களில் 30 பேரின் வாக்குமூலங்கள் சட்டப் பிரிவு 164-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 23 பேர் வன்முறையை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘நூற்றுக்கும் பேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்ற விவகாரத்தில் 23 பேர் மட்டும் தான் நடந்த வன்முறையை நேரடியாக பார்த்தார்களா?; இது நம்பும்படியாக இல்லை’ என்றார். தொடர்ந்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘23 பேர் வன்முறையை நேரில் பார்த்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.

இந்த சாட்சிகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அச்சம் என்ன என்பதை மாநில அரசு புரிந்து கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் 164 சட்ட விதிகளின் நேரடியாக வாக்குமூலங்கள் பெறப்பட வேண்டும்.

பலியானவர்கள் தொடர்பாக தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  

.

மூலக்கதை