5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 மாநில தேர்தல் குறித்து சோனியா ஆலோசனை: மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

புதுடெல்லி: அடுத்தாண்டு நடக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு ெதாடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால், அதைத் தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது.

இது தவிர கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவாவில், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி உருவெடுத்தும் ஆட்சி அமைக்கவிடாமல் பாஜக தடுத்துவிட்டது.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்கள் கிடைப்பதற்காகக் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியங்கா காந்தி அங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாதியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் முயன்று வருகின்றன.



இந்தச் சூழலில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் இன்று தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘ஐந்து மாநிலத் தேர்தல், காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சிகள், போராட்டங்கள், சட்டப்பேரவைத் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டத்தை வழிநடத்தினார்.

5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்’ என்றன.

இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக கடந்த 16ம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தலை நடத்துவது என்றும், நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை