நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது... அசுரன், ஒத்துசெருப்புக்கு தேசிய விருதுகள்; தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!!

தினகரன்  தினகரன்
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது... அசுரன், ஒத்துசெருப்புக்கு தேசிய விருதுகள்; தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கும் கவுரவம்!!

டெல்லி :  ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இந்த விருந்தினை வழங்கினார். இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த்திரையுலகம் வென்றுள்ளது.இந்த விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு...  *சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய \'அசுரன்\' திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. விருதை தயாரிப்பாளர் எஸ். தாணு பெற்றார். அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு விருது வழங்கி வெங்கையா நாயுடு கவுரவித்தார். *நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய் மற்றும் தனுஷ் முறையே இந்தி திரைப்படம்  \'போன்ஸ்லே\' மற்றும் தமிழ் திரைப்படமான \'அசுரன்\' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. *நடிகை கங்கனா ரனாவத் \'மணிகர்னிகா: ஜான்சி ராணி\' மற்றும் \'பங்கா\' படங்களுக்காக  சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. *சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான  விருது  விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. *விஸ்வாசம் படத்திற்காக சிறந்த  இசையமைப்பாளர் விருது டி. இமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  *பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு அளவு 7 படத்திற்கு ஜூரி சிறப்பு விருது வழங்கப்பட்டது. *ஒத்த செருப்பு  திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிக்கலவை விருது  வழங்கப்பட்டது.*சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது  கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு கிடைத்து உள்ளது.

மூலக்கதை