கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஆயுதம் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை

புதுடெல்லி: கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டு மக்களுக்கு, 100 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை செலுத்தி, இந்தியா இன்று சாதனை படைத்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது.

இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதை நிலையில் தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதனால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3வது அலை தொடர்பான அச்சம் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஒன்றிய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டது.

பிப்ரவரி 2ம் தேதி முதல், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் மாநில மற்றும் ஒன்றிய போலீஸ் பணியாளர்கள், ஆயுதப்படை பணியாளர்கள், வீட்டு காவலர்கள், சிவில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், நகராட்சி தொழிலாளர்கள், சிறை ஊழியர்கள், பிஆர்ஐ ஊழியர்கள் மற்றும் வருவாய் பணியாளர்கள் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தேர்தல் பணியாளர்கள் அடங்குவர்.

தடுப்பூசி இயக்கம் மார்ச் 1 முதல் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களையும், அதனுடன் தொடர்புடைய 20 இணை நோய்களுடன் 45 வயதுக்கு மேற்பட்டவர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. இது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தி உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் உத்தராகண்டில் அதிகமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 கோடி தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

இந்தியாவில் 51 சதவீத மக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கடந்த 9 மாதங்களில்  100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய 2வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது.

முன்னதாக சர்வதேச அளவில் இல்லாத அளவாக பிரதமர் மோடியின் பிறந்தநாளின்போது இந்தியாவில் 2 கோடியே 50 லட்சத்துக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் சீனாவில் ஒரே நாளில் 2. 47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது.

இதனை இந்தியா முந்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று (அக். ,21) காலை 8 மணி நிலவரப்படி, 99. 85 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தன.

தொடர்ந்து நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொண்டதன் பலனாக 100 கோடி டோஸ்கள் என்னும் மைல்கல்லை கடந்து இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி தலைநகரில் உள்ள ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனைக்கு இன்று சென்று பார்வையிட்டார்.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,78,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 98. 15 ஆக உள்ளது.

.

மூலக்கதை