ஜாதி ரீதியாக சர்ச்சை பேச்சு!: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது...சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு..!!

தினகரன்  தினகரன்
ஜாதி ரீதியாக சர்ச்சை பேச்சு!: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது...சில மணி நேரங்களில் ஜாமீனில் விடுவிப்பு..!!

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாதி ரீதியாக அவதூறு கருத்தை தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உடன், யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்-ல் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து யுவராஜ் சிங் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்தார். அதில்  சாஹலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜான்சியில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் தனது பேச்சுக்காக யுவராஜ் சிங் அப்போதே மன்னிப்பும் கூறினார். இந்நிலையில் வழக்கறிஞர் ராஜட் கல்சான் என்பவரின் சட்ட போராட்டத்தால் இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் ஹன்சி காவல்துறையினர் தற்போது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் சிங்கை கைது செய்தனர். அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அச்சமயம், தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் இடைக்கால பிணை பெற்றதால் யுவராஜ் சிங் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

மூலக்கதை