உ.பி-யில் 9 பேர் பலியான சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங். பொதுச்ெசயலாளர் பிரியங்கா காந்தி கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பியில் 9 பேர் பலியான சம்பவத்தில் ஆறுதல் கூறச் சென்ற காங். பொதுச்ெசயலாளர் பிரியங்கா காந்தி கைது

லக்னோ:  உத்தரபிரதேசத்தில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த சம்பவத்தில் விவசாயி ஒருவரை ஒன்றிய அமைச்சரின் மகன் சுட்டுக் கொன்றதாக விவசாய அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

பாஜகவை சேர்ந்த உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் ஒன்றிய உள்துறை  இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்றனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் திக்குனியா என்ற இடத்தில் கூடியிருந்தனர். மஹாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்ட காரணத்தால், ஹெலிகாப்டர் பயணத்தை கைவிட்டு சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா சென்றார்.

இந்த இடத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தபோது துணை முதலமைச்சரை வரவேற்க ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவும் அந்த இடத்திற்கு வந்தடைந்தார்.

அப்போது அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏறியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்ததால், மர்ம கும்பல் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தது. தொடர்ந்து நடைபெற்ற சம்பவத்தில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்த சில நிமிடங்களில் மொத்தம் எட்டு பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெரும் பதற்றம் நிலவியதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் குமார் சவுராசியா கூறுகையில், ‘லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.

இன்று காயமடைந்த பத்திரிகையாளர் ஒருவர் இறந்தார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்; மொத்தம் 9 பேர் இறந்துள்ளனர்’ என்றார்.

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா  தலைவர் டாக்டர் தர்ஷன் பால், ‘அமைச்சர் மற்றும் அவரது காரில் இருந்த மற்றவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டும். அஜய் மிஸ்ரா ஒன்றிய அமைச்சரவையில்  இருந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்த  சம்பவம் மனிதாபிமானமற்ற படுகொலை’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நேற்றிரவு ெடல்லியில் இருந்து லக்னோ விமான நிலையம் வந்தடைந்த காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, நேற்று நள்ளிரவு அங்கிருந்து புறப்பட்டு 5 மணி நேரம் காரில் லக்கிம்பூர் கேரி நோக்கி சென்றார். ஆனால், அவரது காரை இன்று அதிகாலை 5 மணியளவில் ஹர்கானில் போலீசார் மடக்கினர்.

பின்னர் அவரை லக்கிம்பூர் கேரி செல்ல அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியங்கா காந்தி, ‘பாதிக்கப்பட்டவர்களின் உறவினரை சந்திக்க செல்கிறேன்.

நான் எந்தக் குற்றமும்  செய்யவில்லை. எதற்காக நீங்கள் (போலீசார்) என்னை வழிமறிக்கின்றீர்கள்.

என்னை கைது செய்வதற்கு வாரண்ட் வைத்திருக்கிறீர்களா. . ?’ என்று கேட்டார்.

இதனால், ஹர்கானில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசாரால் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு சீதாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தேசியத் தலைவர் னிவாஸ் வெளியிட்ட பதிவில், ‘இறுதியாக நடக்க வேண்டியது நடந்தது; இதனை ஆளும் பாஜகவிடம் எதிர்பார்த்ததுதான்.

மகாத்மா காந்தி என்ற ஜனநாயக நாட்டில், ஹர்கானைச் சேர்ந்த விவசாயிகளை சந்திப்பதற்காக, கனமழைக்கு மத்தியில் எங்கள் தலைவர் (பிரியங்கா காந்தி) சென்றார். ஆனால், அவர்களை போலீஸ் படையுடன் தடுத்து நிறுத்தி ‘கோட்சே’வை பின்பற்றுபவர்கள் கைது செய்துள்ளனர்.

இப்போது போராட்டம் தொடங்கியுள்ளது. சீதாப்பூரை நோக்கி மக்களும் விவசாயிகளும் வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்யுக்ட் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) என்ற விவசாயிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘நான்கு விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரு விவசாயி ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மற்றவர்கள் அவரது வாகனத்தின் மீது ஏற்றப்பட்டு கொல்லப்பட்டனர்’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அஜய் மிஸ்ரா, ‘எனது மகன் சம்பவம் நடந்த இடத்தில் இல்லை.

மர்ம கும்பலின் காரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது’ என்றார்.

ஒன்றிய அமைச்சரின் மகன் மீது வழக்கு

உத்தரபிரதேச மாநிலம் திகோனியா காவல் நிலையத்தில், 4 விவசாயிகள் பலியான சம்பவம் தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரி பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதால், அங்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், போலீஸ் ஏடிஜிபி பிரசாந்த் குமாரை லக்கிம்பூர் கேரிக்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார். அதனால் அவர் நேற்று மாலை லக்கிம்பூர் கேரிக்கு வந்து விடியவிடிய அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார்.

ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதியவும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் தூதுக்குழுவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் மற்றொரு தூதுக்குழுவும் இன்று லக்கிம்பூர் கேரிக்கு வருகிறது.

எதிர்கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு விவசாய அமைப்பினர் லக்கிம்பூர் கேரிக்கு வர திட்டமிட்டுள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை அரசியல் தலைவர்கள் வருவதற்கு தடைவிதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை