மேற்குவங்க மாநிலம் பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா முன்னிலை: முதல்வராக நீடிப்பதில் உள்ள சிக்கல் தீர்ந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்குவங்க மாநிலம் பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா முன்னிலை: முதல்வராக நீடிப்பதில் உள்ள சிக்கல் தீர்ந்தது

கொல்கத்தா: பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. அதனால், அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எட்டு கட்டங்களாக சட்டமன்றப் பேரவை நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது.

இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

இருந்தும், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும்.

இந்நிலையில், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றிப்பெற்ற எம்எல்ஏ, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், மிலிட்டன்ட்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால், சிபிஐ-எம் வேட்பாளர் ஜீவ் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

கடந்த 30ம் தேதி நடந்த தேர்தலில், பவானிபூரில் மட்டும் 53. 32 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. சாம்சர்கஞ்ச் தொகுதியில் 78. 60 சதவீத வாக்குகளும், ஜங்கிபூர் தொகுதியில் 76. 12 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று சாகாவத் மெமோரியல் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் வாக்கு எண்ணும் மையத்தில் தொடங்கியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டன.



வாக்கு எண்ணும் மையத்தின் 100 மீட்டருக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எண்ணும் இடத்திற்கு வெளியே கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக பெண் வேட்பாளரான திப்ரேவால், கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தேர்தல் முடிவு வெளியாகும் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதை தடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

மூன்று தொகுதிகளிலம் திரிணாமுல் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். காலை 9. 30 மணி நிலவரபடி இரண்டாவது சுற்றில் மம்தா, 2,500 வாக்குகள் முன்னிலை வகித்தார்.

முதல் சுற்றில் திரிணாமுல் 3,680 வாக்குகள், பாஜகவுக்கு 881 வாக்குகளும், சிபிஐஎம் 85 வாக்குகளும் கிடைத்தன. சாம்சர்கஞ்ச்சில் திரிணாமுல் வேட்பாளர் 1,300 வாக்குகளும், மிலிட்டன்ட்பூரில் திரிணமூல் வேட்பாளர் ஜாகிர் ஹொசைன் 4,651 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார்.

பவானிபூரின் இரண்டாவது சுற்றில் மம்தா 5,333 வாக்குகள் கிடைத்தன. பாஜகவுக்கு  2,956 வாக்குகளும், சிபிஐஎம்-க்கு 132 வாக்குகளும் கிடைத்தன.

இவ்வாறாக அடுத்தடுத்த சுற்றுகளில் மேற்கண்ட 3 தொகுதிகளிலும் திரிணாமுல் வேட்பாளர்களான மம்தா உள்ளிட்ட மூன்று பேரும் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தனர்.

அதனால், மம்தா உள்ளிட்ட மூவரின் வெற்றி உறுதியாகி உள்ளது. இன்று மதியத்திற்கு மேல் முழு வாக்கு எண்ணிக்கையும் முடியும் என்பதால், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த இடைத்தேர்தல் மூலம் மம்தாவின் வெற்றி உறுதியாகி உள்ளதால், அவர் முதல்வராக தொடர்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை