கடந்த 3 நாட்கள் நடந்த அதிரடி சோதனை நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

தினகரன்  தினகரன்
கடந்த 3 நாட்கள் நடந்த அதிரடி சோதனை நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை தகவல்

மும்பை: நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்ட தூதராக சோனு சூட்டை கெஜ்ரிவால் நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள சோனு சூட் வீடு மற்றும் அலுவலகம், லக்னோவில் சோனு சூட் பங்குதாரராக உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம் என 6 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆம் ஆத்மியில் சேர உள்ளதாக வெளியான தகவலை அடுத்தே சோனு சூட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்தது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: கொரோனா முதல் அலை உருவானதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூட் அறக்கட்டளையை சோனு சூட் அமைத்தார். அந்த அறக்கட்டளை ரூ.18 கோடியை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நன்கொடையாக வசூலித்துள்ளது. இதில் ரூ.1.9 கோடியை நிவாரண பணிக்காக வழங்கிய அறக்கட்டளை ரூ.17 கோடியை அறக்கட்டளையின் வங்கி கணக்கில் பயன்படுத்தாமல் வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி நன்கொடை பெற்றதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. கணக்கில் வராத பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் லக்னோவில் உள்ள நிறுவனங்களுக்கு சோனு சூட் கடனாக கொடுத்து மோசடி செய்துள்ளார். இதுவரை சோனு சூட் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 20 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ. 1.8 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

மூலக்கதை