இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி

தினமலர்  தினமலர்
இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி

சென்னை: ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, 'தினமலர்' நாளிதழின், கோவை பதிப்பு வெளியீட்டாளர், இல.ஆதிமூலத்திற்கு, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின்

அருளாசி:


சனாதன தர்மத்தில், 'உண்மை' மிகச் சிறந்த நல்லொழுக்கமாக பார்க்கப்படுகிறது. சிந்தனை, வாக்கு, செயல்களில் உண்மையை கடைப்பிடிப்பது தர்மமாகும்.நம் பாரம்பரியத்தில், பேசப்பட்ட வார்த்தைகள், பல்வேறு வகைகளில் எழுத்து வடிவில் துல்லியமாக பதிவிடப்பட்டுஉள்ளன. அது கற்களில், தாமிர பத்திரத்தில், கையெழுத்து பிரதிகள் என, பல ரூபங்களில் உள்ளது. பேசப்பட்ட வார்த்தைகள் மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம், உண்மை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.


நம் சாஸ்திரத்தில், எழுத்துக்கள் கடவுள்களாக கருதப்பட்டு, அக் ஷர தேவ தைகளாக போற்றி வணங்குகிறோம். எழுத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. கடவுள் லலிதாவை, மொழி வடிவில் உள்ள கடவுள் என, அதாவது, 'பாஷா ரூபா' என்று அழைக்கிறோம்.சமஸ்கிருதத்தில் கூறப்படும், 'சஹஸ்ரம் வாதா அகம் ம லிகா' என்ற பழமொழி, எழுத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கடவுள் விநாயகர், மஹாபாரதத்தை எழுதியதாக, நம் இதிகாசங்கள் கூறுகின்றன. இன்றைய காலத்திலும், மனிதகுலத்தின் சிந்திக்கும் திறனை வடிவமைப்பதாக, மஹாபாரதம்
உள்ளது. இதிகாசம் என்றால், 'இதி ஹ அசா' அதாவது, நடந்த உண்மையை அப்படியே குறிப்பிடுவது என, அர்த்தம். ராமாயணமும் அதுபோலவே, இரண்டு பறவைகள் பிரிவதை பார்த்த வால்மீகியால், உணர்வு பூர்வமாக உணர்ந்து கூறப்பட்டது. அவர் எப்போதும், ஒற்றுமையையே வலியுறுத்தினார்.

அவர் ஒவ்வொரு சுலோகமாக சொல்ல, அவருடைய சீடரான பரத்வாஜர் அவற்றை எழுதினார். அதனால், ராமாயணம் நமக்கு எழுத்து வடிவில் கிடைத்துள்ளது.தற்போதைய காலகட்டத்தில், ஒவ்வொரு கணமும், உலகெங்கும் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யும் ஒரு மார்க்கம், பத்திரிகைகள் தான்.உண்மையின் மெய்ப்பொருளில் இருந்து பிசகி விடாமல், உள்ளது உள்ளபடியே, மிகவும் வெளிப்படையாக சம்பவங்களை கூறி, தகவல் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கையுடன் இருக்கவும், மக்களைத் துாண்டும் பணியை பத்திரிகைகள் செய்கின்றன.
இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக, 'தினமலர்' நாளிதழின் ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறோம். இது, தனிப்பட்ட முறையில் ஆதிமூலத்துக்கும், குழுமம் என்ற அடிப்படையில், 'தினமலர்' நாளிதழுக்கும் கிடைத்துள்ள சிறப்பான கவுரவம் மற்றும் உயர்ந்த ஸ்தானம்.

மேலும், பல ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த சிறப்பான பொறுப்பை பெற்றுள்ள ஆதிமூலத்துக்கு, எம் ஆசிகள். உண்மை மற்றும் மனித குணங்களை பராமரிப்பது, வெளிப்படை தன்மையை ஊக்குவிப்பது.ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை வளர்ப்பது, தேச பக்தி மற்றும் தெய்வ பக்தி மூலம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவது போன்ற மக்கள் நலன் சார்ந்த உயர்ந்த மாண்புகளை கொண்டுள்ள, ஐ.என்.எஸ்., அமைப்பின் தலைவராக, சிறப்பாக செயல்பட அவரை
வாழ்த்துகிறோம்.இவ்வாறு அந்த அருளாசியில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை