காற்றில் கலந்தது கானக் குரல்; மண்ணில் மறைந்தது பூத உடல்: எஸ்.பி.பி., உடல் அடக்கம்

தினமலர்  தினமலர்
காற்றில் கலந்தது கானக் குரல்; மண்ணில் மறைந்தது பூத உடல்: எஸ்.பி.பி., உடல் அடக்கம்

தன் காந்தக் குரலால், கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டிருந்த, பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல், 72 குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில், நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், 74, ஆகஸ்ட், 5ம் தேதி, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சென்னை, சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அவரின் உடல்நிலை, 14ம் தேதி மோசமடைந்தது.தீவிர சிகிச்சை பிரிவில், 'வென்டிலேட்டர் மற்றும் எக்ஸ்மோ' கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.


போலீசார் பாதுகாப்பு



நேற்று முன்தினம் காலை முதல், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து. 51 நாட்கள் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மதியம், 1:04 மணிக்கு, அவரது உயிர் பிரிந்தது.எஸ்.பி.பி.,யின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், மாலை, 4:00 மணிக்கு வைக்கப்பட்டது. அங்கு உறவினர்கள், திரை உலகத்தினர், பொது மக்கள், ரசிகர்கள் என, அதிகளவில்குவிந்தனர்.இதனால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. பின், அவரது உடல், இரவு, 9:00 மணிக்கு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள, அவரதுபண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.


இது குறித்த தகவலறிந்த பொதுமக்கள், ரசிகர்கள் வழி நெடுகிலும், அவரது உடலை ஏந்திச் சென்ற வாகனத்தின் மீது, மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை துாவி, இறுதி அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக, பண்ணை வீட்டில், எஸ்.பி.பி., உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை, ஜே.சி.பி.,இயந்திரம் வாயிலாக, சீர்படுத்தும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இரவு, 10:50 மணிக்கு, தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு, அவரது உடல் வந்து சேர்ந்தது.
அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று, மக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர், வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன், டி.ஐ.ஜி., சாமுண்டீஸ்வரி, எஸ்.பி., அரவிந்தன் மற்றும், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் மரியாதை



போலீசார் ஒலிபெருக்கிவாயிலாக, பொது மக்களுக்கு தகவல்களை பரிமாறினர். கனரக வாகனங்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.உடல் அடக்கம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கியதை அடுத்து, காலை, 10:20 மணிக்கு, பொது மக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தப்பட்டது.இதனால், ஏராளமான மக்கள் சாலையில் காத்திருந்தனர். பின், 11:20 மணிக்கு, மந்திரங்கள் ஓத, குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு நடந்தது. பின், உறவினர்கள், அவரது உடலை அடக்கம்செய்யும் இடத்திற்கு, போலீஸ் மரியாதையுடன் எடுத்துச் சென்றனர்.அங்கு, 72 குண்டுகள் முழங்க, அவரது பூத உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மகன் சரண் இறுதிச் சடங்குகளை செய்தார். முன்னதாக, தாமரைப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டன.



அமைச்சர்கள் அஞ்சலி!



தமிழக அமைச்சர் பாண்டியராஜன், முன்னாள் மாவட்ட குழு தலைவர் ரவிச்சந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஆந்திர நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் யாதவ், திருப்பதி எம்.எல்.ஏ., கருணாகர ரெட்டி, நெல்லுார் எம்.எல்.ஏ., கிருஷ்ணா ரெட்டி, தடா எம்.எல்.ஏ., சஞ்சீவி, நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான், மயில்சாமி, வெங்கட்பிரபு.
பின்னணி பாடகர் மனோ, இசை அமைப்பாளர்கள் தீனா, தேவிஸ்ரீபிரசாத், இயக்குனர்கள் பாரதிராஜா, சமுத்திரகனி, அமீர், திண்டுக்கல் லியோனி மற்றும் பிரமிட் நடராஜன், கல்யாணமாலை மோகன் உட்பட பலர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தந்தையின் முகத்தை துடைத்த மகன்!



இறுதிச் சடங்கு செய்வதற்காக, எஸ்.பி.பி.,யின் உடல், 'ப்ரீசர் பாக்சில்' இருந்து, வெளியே எடுக்கப்பட்ட நிலையில், எஸ்.பி.பி.,யின் மகன் சரண், தந்தையின் கன்னத்தில் இருந்த நீர்த்துளிகளை, கண்ணீருடன் துணியால் துடைத்தார்.



பாட்டுக்கு நான் அடிமை



துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான், திருவள்ளூர், கோயம்பாக்கம் பகுதியில், 40 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறேன். உழைத்து வீட்டிற்கு வந்தவுடன், இரவில் துாங்கும் போது, எஸ்.பி.பி., பாடிய பாடலை கேட்காமல் துாங்க மாட்டேன். அவரது பாடலை கேட்டால் தான், எனக்கு ஆழ்ந்த நிம்மதி.அவரின் உடலை பார்ப்பதற்கு, 30 கி.மீ., துாரம், இருசக்கர வாகனத்தில் வந்தேன். அவரது உடலை பார்த்ததில், எனக்கு மிகுந்த மன நிம்மதி. இவரைப் போல ஒருவரை, உலகில் பார்க்க முடியாது.-கே.பொன்ராஜ், கோயம்பாக்கம், திருவள்ளூர்.



மிகவும் வருத்தமாக உள்ளது



எனக்கு, 65 வயதாகிறது. மிகப்பெரிய பாடகரான, எஸ்.பி.பி.,யை பார்க்க முடியுமா என, புலம்பிக் கொண்டிருந்தேன். எங்கள் ஊரில் தான் நல்லடக்கம் செய்கின்றனர் என தெரிந்தவுடன், நேற்று முன்தினம், இரவு, 11:00 மணிக்கே வந்து விட்டேன். நேற்று காலை, அவரைப் பார்த்த பின்தான் என் மனம் நிம்மதியடைந்தது.எங்கோ பிறந்து, வளர்ந்து, எங்கள் ஊரில் நல்லடக்கம் செய்வது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அதே நேரத்தில், நாங்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளோம்.இ.சின்னபொண்ணு, தாமரைப்பாக்கம்.- நமது நிருபர் -

மூலக்கதை