கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு: அக்.28, நவ.3, 7ம் தேதியில் வாக்குப்பதிவு: நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை

தினகரன்  தினகரன்
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு: அக்.28, நவ.3, 7ம் தேதியில் வாக்குப்பதிவு: நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதிலும், பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று  கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 243 தொகுதிகளை கொண்ட இந்த பேரவைக்கு, அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. பீகார் சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது அவசியமாகும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. தேர்தலை ஒத்திவைக்கும்படி பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தது.  இந்நிலையில், இம்மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு: * மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெறும்.* கொரோனா நோய் தொற்று காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்களின் போக்குவரத்து பயணங்களை குறைக்கும் வகையில், இந்த ஆண்டு 3 கட்டங்களாக மட்டுமேவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.   * முதல் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளிலும், மூன்றாவது கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். * தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பீகாரில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. * வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வழக்கமான நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடத்தப்படும். இந்த கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7.29 கோடி.* சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.* கடந்த 2015ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், இம்மாநிலத்தில் 65,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், கொரோனா காரணமாக இம்முறை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்புஉச்ச நீதிமன்றத்தில் அஜய் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது மக்களின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதனால், இத்தேர்தலை தள்ளிவைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அசாதாரண சூழலில்  தேர்தலை தள்ளிவைக்க முடியும்,’ என குறிப்பிட்டு இருந்தார். நீதிபதிகள் அசோக் பூஷன் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கொரோனாவை காரணம்காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்கும்படி கூறுவதை ஏற்க முடியாது. அது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட முடியாது. கொரோனோ விவகாரத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அது பற்றி மனுதாரர் கவலை அடைய தேவையில்லை,’ என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிக்கும் நடக்குமா?பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது, தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகள் உட்பட 14 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், பீகாரில் காலியாக உள்ள வால்மீகி நகர் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிடவில்லை. இந்த இடைத்தேர்தலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கும்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், இம்மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி வரும் 29ம் தேதி ஆலோசனை செய்து முடிவை அறிவிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.முகக்கவசம் கட்டாயம்ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர்களின் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படும். இலவச முகக்கவசம் வழங்கப்படும். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும், வாக்களிப்பதற்கு கையுறையும் வழங்கப்படும். வாக்களிக்கும் போது கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.23 லட்சம் ஜோடி கையுறைபீகார் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக 7 லட்சம் கிருமி நாசினி பாட்டில்கள், 46 லட்சம் முகக் கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உடை (பிபிஇ கிட்ஸ்), 6.7 லட்சம் முகக் கேடயங்கள், 23 லட்சம் கோடி கையுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மனுத் தாக்கல், பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, வேட்பாளர்களுடன் 3 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. வேட்பாளர்கள் பேரணி செல்வதற்காக வழக்கமாக 10 வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதற்கு மாறாக, தற்போது 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மூலக்கதை