திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் இரவு கருட சேவையில் மலையப்ப சுவாமி: பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த முதல்வருக்கு வரவேற்பு

தினகரன்  தினகரன்
திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாள் இரவு கருட சேவையில் மலையப்ப சுவாமி: பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த முதல்வருக்கு வரவேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று இரவு கருட சேவையில் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதையொட்டி பட்டுவஸ்திரம் சமர்ப்பிக்க திருப்பதி வந்த முதல்வர் ெஜகன்மோகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்று முன்தினம் இரவு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரம்) பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு தேவர்கள் மற்றும் அசுரர்கள் இணைந்து கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. இந்த அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து, தேவர்களுக்கு மட்டும் கிடைக்கச் செய்யும் விதமாக மகாவிஷ்ணு நாச்சியார் திருக்கோலத்தில் (மோகினி அலங்காரத்தில்) தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கினார். அதன்படி, மாய மோகத்தை போக்கும் விதமாக மலையப்ப சுவாமி, மோகினி அலங்காரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் மோகினி அலங்காரத்தின் அழகை ரசித்தவாறு கிருஷ்ணர் அருள்பாலித்தார்.தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் முதல்வர் ஜெகன் மோகன் திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமர்ப்பித்தார். தொடர்ந்து பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இரவு நடந்தது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கருடசேவையை முன்னிட்டு, ஏழுமலையான் கோயில் முழுவதும் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட பூக்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  ஆண்டாள் சூடிகொடுத்த மாலைவிருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலை நேற்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாடவீதியில் யானைகள் அணிவகுத்து முன் செல்ல, ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, இரவு நடந்த கருட சேவையின்போது ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது. காணொலியில் பிரதமருடன் முதல்வர் ஆலோசனை ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதல்வர் ெஜகன் மோகன் திருப்பதி வந்தார். பின்னர், அன்னமய்யா பவனுக்கு சென்ற முதல்வர் ஜெகன் மோகன், அங்கிருந்தபடி பிரதமர் மோடியுடன் 7 மாநில முதல்வர்களுக்கான காணொலி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமருடன் முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தினார்.  கர்நாடக முதல்வர் வருகைதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முதல்வர் ஜெகன் மோகனுடன் இணைந்து இன்று சுவாமி தரிசனம் செய்கிறார். மேலும், ஏழுமலையான் கோயிலுக்கு வரும் கர்நாடக மாநில பக்தர்கள் வசதிக்காக 200 கோடியில் ஓய்வு அறையை திருமலையில் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக, எடியூரப்பா நேற்றிரவு திருப்பதிக்கு வந்தார்.

மூலக்கதை