வேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.!!!

தினகரன்  தினகரன்
வேளாண் மசோதாவில் கையெழுத்திடக்கூடாது: எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து குலாம் நபி ஆசாத் மனு.!!!

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 20-ந் தேதி விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்கள் விலை உத்தரவாத மசோதா ஆகிய 2 மசோதாக்களும் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சிகளான  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவற்றை தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை சபையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ்  ஏற்க மறுத்தபோது, அவரது இருக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், 2 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய வேளாண் மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். சஸ்பெண்ட்  நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும், வேளாண் மசோதாக்களில் திருத்தங்கள் கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுடைந்த  நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதற்கிடையே, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் காந்தி சிலை அருகே காங்கிரஸ், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை  முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சி சார்பில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து  காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத்  மனு  அளித்தனர்.குலாம் நபி ஆசாத் பேட்டி:  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி.குலாம் நபி ஆசாத்,  வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நாடாளுமன்றத்துக்கே திருப்பி அனுப்ப ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ள வேளாண் மசோதாவை நிராகரிக்க வேண்டும். மத்திய அரசு தேர்வுக்குழுவுக்கு வேளாண் மசோதாவை அனுப்பவில்லை.  நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமளிக்கு அரசுதான் காரணம். ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 18 கட்சிகளை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளோம். வேளாண் மசோதாவில் குடியரசுத் தலைவர் கையெழுத்து இடமாட்டார் என்று நம்புகிறோம் என்றார். திமுக எம்.பி.திருச்சி சிவா பேட்டி: வேளாண் மசோதா குறித்து பல தரப்பினரிடம் கருத்து கேட்கலாம் என்று வலியுறுத்தினோம். வேளாண் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக மசோதாவை நிறைவேற்றி உள்ளது என்றார் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.

மூலக்கதை