உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ. 100 கோடி மோசடி; 30 இயக்குனர்கள் மீது போலீஸ் வழக்கு

தினகரன்  தினகரன்
உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் ரூ. 100 கோடி மோசடி; 30 இயக்குனர்கள் மீது போலீஸ் வழக்கு

காசியாபாத்:உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கியில் ₹100 கோடி மோசடி செய்த 30 இயக்குனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் மகாமேதா கூட்டுறவு வங்கி செயல்பட்டது. ஆனால், தற்போது இந்த வங்கி செயல்படவில்லை. வங்கி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தகுதியற்ற நபர்களுக்கு கடனை வாரி வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காசியாபாத் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து மேற்கண்ட வங்கியின் இருபத்தி நான்கு இயக்குநர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை உதவி ஆணையர் மற்றும் பதிவாளர் தேவேந்திர சிங் கூறுகையில், ‘கூட்டுறவுத் துறையின் தணிக்கை துறை ஆவணங்களை ஆய்வு செய்ததில், பலருக்கு முறைகேடாக கடன் வழங்கப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தகுதியற்ற வாடிக்கையாளர்களுக்கு வங்கி அதிகாரிகள் பெரும் அளவில் கடன்களை அனுமதித்துள்ளனர். இதற்காக 99.85 கோடி ரூபாய் வங்கியின் பணத்தை கையாடல் செய்துள்ளனர். இவ்வழக்கின்படி, வங்கியில் இருந்து அதிக கடன் வாங்கிய ஏழு பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மற்ற கடன் வாங்கிய நபர்களின் சொத்துக்களும் முடக்கப்படும். உத்தரபிரதேச காவல்துறையின் கூட்டுறவு பிரிவு வழக்கை விசாரித்து வருகிறது. எப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த வங்கியை நடத்துவதற்கான அனுமதியை பிப்ரவரி 27, 2001ல் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது. முறைகேடுகள் காரணமாக அதன் உரிமம் 2017ல் ரத்து செய்யப்பட்டது’ என்றார்.

மூலக்கதை