ஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஷ்ராமிக் ரயிலில் தொழிலாளர்கள் 97 பேர் பலி

புதுடெல்லி: மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்து மூலமாக அளித்த பதில் வருமாறு: மாநில போலீசார் அளித்த தகவலின்படி, 9.9.2020 வரை இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம் பெயர் தொழிலாளர்களில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. 97 மரணங்களில் 87 பேரது சடலங்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 51 பேர் மாரடைப்பு, இதய பிரச்னை, நுரையீரல், சிறுநீரக கோளாறால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த வார தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின்போது உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என தொழிலாளர் துறை சார்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த புள்ளி விபரத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை