குறைவான வரி: தமிழகத்திற்கு ரூ.4,432 கோடி இழப்பு

தினமலர்  தினமலர்
குறைவான வரி: தமிழகத்திற்கு ரூ.4,432 கோடி இழப்பு

சென்னை : வணிக வரி, முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம், சுரங்கம் மற்றும் கனிமம் போன்றவற்றில், குறைவான மதிப்பீடு, குறைவாக வரி விதித்தல் போன்ற காரணங்களால், 4,432.44 கோடி ரூபாய்க்கு, தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, இந்திய தணிக்கைத் துறை தலைவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வருவாய் பிரிவின், இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கை, நேற்று முன்தினம், சட்டசபையில், தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக அரசுக்கு, 2017 -- 18ம் ஆண்டின் மொத்த வருவாய், 1.46 லட்சம் கோடி ரூபாய். இதில், வரி வருவாய், 93 ஆயிரத்து, 744 கோடி; வரி அல்லாத வருவாய், 10 ஆயிரத்து, 764 கோடி ரூபாய்.மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து, மாநிலத்தின் வரி பங்காக, 27 ஆயிரத்து, 100 கோடி; மானிய உதவியாக, 14 ஆயிரத்து, 679 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.மொத்த வருவாயில், மாநில அரசால் ஈட்டப்பட்ட வருவாய், 71 சதவீதம். இது, 2016- - 17ம் ஆண்டு, 68 சதவீதமாக இருந்தது.

விற்பனை வரி, ஜி.எஸ்.டி., போன்றவை, மாநில அரசின் வரி வருவாயில், 76 சதவீதமாகும். வணிக வரி, வாகனங்கள்மீதான வரி, முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம், சுரங்கம், கனிமம், நில வருவாய் சம்பந்தமான பதிவு போன்றவை, 2017 -- 18ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வு செய்யப்பட்ட, 3,544 இனங்களில், குறைவான வரி மதிப்பீடுகள், குறைவாக வரி விதித்தல் போன்றவற்றால், 4,432 கோடி ரூபாய்க்கு, இழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பதிவு அதிகாரிகள், ஆவணங்களை தவறாக வகைப்படுத்தியதால், 19 பதிவு அலுவலகங்களில், முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம், 67.33 லட்சம் ரூபாய், குறைவாக வசூலிக்கப்பட்டுஉள்ளது. பழைய சுற்றுலா வாகன உரிமையாளர்களிடம் இருந்து, 32.61 லட்சம் ரூபாய் அளவிற்கு, ஆயுட் கால வரி வசூலிக்கப்படவில்லை.தனியார் சேவை வாகனங்கள், கல்வி நிறுவன வாகனங்களாக, தவறாக வகைப்படுத்தப்பட்டதால், வரியாக, 21.15 லட்சம் ரூபாய் குறைவாக பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊர்திகள், தனியார் சேவை வாகனங்களாக, தவறாக வகைப்படுத்தப் பட்டதால், 18.53 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை