எல்லை விவகாரம்:நம் வீரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு

தினமலர்  தினமலர்
எல்லை விவகாரம்:நம் வீரர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு

புதுடில்லி : சீனாவுடனான எல்லை விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடந்த விவாதத்தின்போது, நம் ராணுவ வீரர்களுக்கு ஒருமித்த ஆதரவு தருவதாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் குறிப்பிட்டன.

'எல்லையில் ரோந்துப் பணிகளை நம் ராணுவம் மேற்கொள்வதை, உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங், உறுதிபட தெரிவித்தார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. பல நிலைகளில் பேச்சு நடத்தப்பட்ட பிறகும், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா முன்வரவில்லை.இதனால், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியுள்ளது.சீனா உடனான பிரச்னை குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங், லோக்சபாவில் அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் நேற்று இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க முடிவுசெய்யப்பட்டது.



மதிக்கிறோம்



பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதாலும், உணர்வு பூர்வமான விஷயம் என்பதாலும், இது தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. இதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொண்டன.அதையடுத்து, லோக்சபாவில் தாக்கல் செய்தது போன்று, ஒரு அறிக்கையை, ராஜ்நாத் சிங், ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்தார்.'அமைச்சரின் அறிக்கை மீது சந்தேகம் இருந்தால், அது குறித்து பேசுவதற்கு அனுமதிக்கப்படும்' என, ராஜ்யசபா தலைவரான,துணை ஜனாதிபதி, வெங் கையா நாயுடு அறிவித்தார்.அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த விவகாரம் குறித்து பேசினர்.

காங்கிரசை சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான, குலாம் நபி ஆசாத் பேசியதாவது:மூன்று மாதங்களுக்கு மேலாக எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.எல்லையை பாதுகாக்க, ஜம்மு - காஷ்மீர் மக்கள் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளனர்.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவன் என்ற முறையில் இதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.தற்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையில் நம் ராணுவத்தின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். அவர்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். சீனா உடனான பிரச்னை யில், மத்திய அரசுக்கு, எங்களுடைய கட்சி முழுஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளது. கடந்த, ஏப்ரல் மாதத்தில், எல்லையில் இருந்த நிலைமை திரும்ப வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.



மிகுந்த எச்சரிக்கை



காங்கிரசை சேர்ந்த, முன்னாள் ராணுவஅமைச்சரான, ஏ.கே. அந்தோணி பேசியதாவது:கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இத்தனை ஆண்டுகளாக, எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது, அங்கு ரோந்து மேற்கொள்ள, நம் படைகளை அனுமதிக்க சீனா மறுப்பதை ஏற்க முடியாது.ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களின் படி, பல ஆண்டுகளாக இரு நாடும் நிர்ணயித்து வந்துள்ள எல்லையை மதித்து, நம் ராணுவம் தொடர்ந்து, ரோந்துப் பணிகளை மேற்கொள்ள சீனா அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.'தற்போதுள்ள நிலை தொடர்பாக, சீனாவுடன் எந்தப் பேச்சு நடத்தினாலும், ஒப்பந்தம் செய்தாலும், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, பிஜூ ஜனதா தளத்தின் பிரசன்னா ஆச்சாரியா, சிவசேனாவின், சஞ்சய் ராவத் வலியுறுத்தினர்.

'சீனாவுடன் பேச்சு நடத்தும்போது, நாம் மிகவும் வலுவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தளத்தின், ஆர்.சி.பி. சிங் குறிப்பிட்டார்.தி.மு.க.,வின் திருச்சி சிவா, பி.வில்சன், அசாம் கண பரிஷத்தின் பி.பி., பைஷ்யா, சமாஜ்வாதி கட்சியின் ரவி பிரகாஷ் வர்மா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் கே.கேசவ ராவ், பகுஜன் சமாஜ் கட்சி யின் வீர் சிங், உள்ளிட்டோரும், ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

'ரோந்து உரிமையைதடுக்க முடியாது'



அறிக்கையை தாக்கல் செய்து, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசியதாவது:நம் ராணுவ வீரர்கள், எல்லையில் ரோந்துப் பணிகள் மேற்கொள்வதை, உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அது நம்முடைய உரிமை. அதை விட்டுத் தர மாட்டோம்.இரு நாடுகளுக்கும் இடையே எல்லை வரையறுக்கப்படவில்லை. இதற்கு முன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில், எல்லையை மதித்து செயல்பட்டு வருகிறோம். ஆனால், அதை ஏற்காமல் சீனா முரண்டு பிடித்து வருகிறது.எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் பேச்சு வாயிலாக தீர்வு காண்பதையே, இந்தியா விரும்புகிறது. ஆனால், லடாக், கோக்ரா, பாங்காங் சோ ஏரி ஆகிய பகுதிகளில், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை மாற்றி, ஒருதலைப்பட்சமாக சீன ராணுவம் செயல்படுகிறது.

இது போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.இறையாண்மையை பாதுகாக்க, எந்த ஒரு நடவடிக்கைக்கும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்பதை, சீனாவுக்கு நாம் உறுதிபட தெரிவித்துள்ளோம்.நம் வீரர்களின் திறமையில் யாருக்கும், எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாடே, அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எல்லையில் அத்துமீறி செயல்பட்டால், அது, இரு தரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, சீன அரசு உணர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை