கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரை தியாகம் செய்த 382 டாக்டர்கள்: மறைக்கும் மத்திய அரசுக்கு ஐஎம்ஏ கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா சிகிச்சை பணியின் போது உயிரை தியாகம் செய்த 382 டாக்டர்கள்: மறைக்கும் மத்திய அரசுக்கு ஐஎம்ஏ கண்டனம்

புதுடெல்லி: ‘‘கொரோனா சிகிச்சை பணியின் போது, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 382 டாக்டர்கள் குறித்த விபரங்களை மத்திய அரசு மறைக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசின் சாதனை என்று குறிப்பிட்டு பேசிய போது, உயிரிழந்த டாக்டர்களின் தியாகங்களை வேண்டுமென்றே மறைத்து விட்டார்’’ என்று இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) குற்றம்சாட்டியுள்ளது.

ஐஎம்ஏவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் உயிரை பணயமாக வைத்து டாக்டர்கள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சையின் போது, கோவிட்-19 தொற்று ஏற்பட்டதால் இதுவரை 382 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். 27 வயதேயான இளம் டாக்டர் மற்றும் 85 வயதான முதிய டாக்டர் உட்பட 382 பேர் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.

ஆனால் கொரோனா பரவல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணிகளை நாடாளுமன்றத்தில் பாராட்டி பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தனது உரையின் போது உயிரிழந்த டாக்டர்கள் குறித்து ஒரு சொல் கூட கூறவில்லை.

எந்த ஒரு நாடும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த எண்ணிக்கையில் டாக்டர்களை இழந்ததில்லை என்பதை அவர் உணர வேண்டும். இந்த போராட்டத்தில் உயிரிழந்த டாக்டர்களின் தியாகம் மதிக்கப்படவில்லை.

இதுவரை அவர்களுக்கான இழப்பீடு என தெளிவாக எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. பெரும்பாலான மாநில அரசுகளும் இதை கண்டுகொள்ளவில்லை.

தேசிய அளவிலான ஹீரோக்கள் என மதிக்கப்பட வேண்டிய டாக்டர்கள், மத்திய அரசால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் மூலம் பெரும் நோய் தடுப்பு மற்றும் பேரழிவு மேலாண்மை சட்டம் 1897ன் படி, மத்திய அரசு தனது தார்மீக கடமைகளை இழந்து விட்டது.

ஒருபுறம் கொரோனாவுக்கு எதிரான போராளிகள் என தேவைப்படும் போது டாக்டர்களை புகழும் மத்திய அமைச்சர்கள்,

இந்த போராட்டத்தில் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பங்களை எண்ணிப்பார்க்க மறுப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு ஐஎம்ஏ கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணிகளில் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ள 22 லட்சம் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் வரை தேசிய அளவில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என கடந்த மார்ச்சில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு கூட இவ்வாறான காப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு, அதுவும் அறிவிப்போடுதான் நிற்கிறது.

அதே அலட்சியமான நடவடிக்கையை சுகாதாரத் துறை பணியாளர்களிடமும் வெளிப்படுத்தி வருகிகிறது என்று எதிர்கட்சி தலைவர்கள் பலர் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், ஐஎம்ஏவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை