அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகள் தேக்கம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்க தயார்: மத்திய அரசு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகள் தேக்கம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்க தயார்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: முன்னாள், இந்நாள் எம்பிக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான 4,600 வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை ஏற்க தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வின் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் முன்னாள், இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு எதிராக தொடரப்பட்ட 4,600 குற்ற வழக்குகளின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

குறிப்பாக குற்ற வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டால்தான் அரசியல்வாதிகள் அடுத்து வரும் தேர்தல்களில் நிற்க தடை விதிக்கப்படும்.

எனவே அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து, உடனடியாக தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். வி. ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘முன்னாள், இந்நாள் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம்.

அவ்வாறு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை மத்திய அரசு வரவேற்கும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய அரசு முழுவதுமாக துணை நிற்கும்’’ என்று தெரிவித்தார்.



இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஒரு திட்ட வரைவு தயார் செய்யுமாறு நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

.

மூலக்கதை