பெங்களூர் விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தல்: சொப்னா கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூர் விமான நிலையம் வழியாகவும் தங்கம் கடத்தல்: சொப்னா கும்பல் குறித்து அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திவரப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கனவே தூதரகம் வழியாக துபாயில் இருந்து குரான் கொண்டு வரப்பட்டது. அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையில் அவர் அளித்த விவரங்களை சுங்கஇலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்து வருகிறது.

இதில் பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக அமீரக தூதரக பார்சலில் சொப்னா கும்பல் பலமுறையாக 200 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இக்கும்பல் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் வழியாகவும் தங்கம் கடத்தி இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்தும் சுங்கஇலாகா மற்றும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சொப்னா, முகம்மது அன்வர் உள்பட 5 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ தீர்மானித்தது. இது தொடர்பாக கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் சொப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாலும், முகம்மது அன்வரின் வாரண்டில் சில பிரச்னைகள் இருந்ததாலும் நேற்று முன்தினம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.



இதையடுத்து மற்ற 3 பேரையும் ஆஜர்படுத்தினர். அவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் நேற்று முகம்மது அன்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சொப்னாவின் மருத்துவ பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் ேநற்று அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை.

இன்று சொப்னாவை ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சொப்னாவை காவலில் எடுத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என என்ஐஏ கருதுகிறது.

சொப்னா, முகம்மது அன்பவர் உள்பட கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் இருந்து செல்போன், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட டிஜிட்டல் உபகரணங்களை என்ஐஏ கைப்பற்றி இருந்தனர். தற்போது அதில் உள்ள விவரங்கள் முழுவதும் சேகரிக்கப்பட்டுள்ளது.

அதில் பல விவரங்களை டெலிட் செய்திருந்தினர்.

அவற்றையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.

இதில், இந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த விஐபிகள் யார் உள்ளிட்ட பல தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவரங்களை வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்த என்ஐஏ தீர்மானித்துள்ளது.

.

மூலக்கதை