ராஜ்யசபா துணைத் தலைவருடன் தி.மு.க.,- எம்.பி.,வாக்குவாதம்

தினமலர்  தினமலர்
ராஜ்யசபா துணைத் தலைவருடன் தி.மு.க., எம்.பி.,வாக்குவாதம்

மத்திய அரசை, சரமாரியாக விமர்சித்து பேசிய தி.மு.க., - எம்.பி.,க்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கவே, அவர் ராஜ்யசபா துணைத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் இறங்கினார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது:பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது. பலியோ, 82 ஆயிரம் பேர். பல்லாயிரம் உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பிரச்னையை விவாதித்து, தீர்வு காண்பது தான் முக்கியம்.
அழக்கூட தெம்பில்லாமல் மக்கள் இருக்கும் நிலையில், 'அதைச் செய்தோம்; இதைச் செய்தோம்' என, அரசு பீற்றுகிறது. மார்ச் 23 அன்று தான், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி யிலேயே கொரோனா தொற்று இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு விட்டது.

இடைப்பட்ட நாட்களில், அவர்களது ஒரே குறி, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரவேற்பை கொண்டாட வேண்டும்; ம.பி.,யில், கமல்நாத் அரசை கவிழ்க்க வேண்டும். இவை தான், தாமதமான ஊரடங்கிற்கு காரணம். இவ்வாறு, சிவா பேசிக் கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நேரம் கடந்துவிட்டதாக கூறி, பேச்சை நிறைவு செய்ய வலியுறுத்தினார்.

இதனால் கடுப்பான சிவா, ''என் உரையை கட்டுப்படுத்த முயற்சித்தால், நான் பேசுவதே வீண்,'' என்றார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சிவா தொடர்ந்து பேச, துணைத் தலைவர் ரகுவன்ஷ் அனுமதி மறுக்கவே, வெறுத்துப்போன சிவா, ''எங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதியில்லாத நிலையில், இனி இந்த சபைக்கு வருவதில், அர்த்தமே இல்லை,'' என பொங்கினார். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

பின், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதாவது:அனைத்து மருத்துவ முறைகளுக்கும் முக்கியத் துவம் தர வேண்டும். சித்த மருத்துவம் தன்னிகரில்லாதது. எனவே, தாம்பரம் சித்த மருத்துவ மையத்துக்கும் தேசிய அந்தஸ்தை அளிக்க வேண்டும். தமிழகத்திலும் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -

மூலக்கதை