ரூ.861 கோடி பார்லி., புதிய கட்டடம்: 'டாடா' நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

தினமலர்  தினமலர்
ரூ.861 கோடி பார்லி., புதிய கட்டடம்: டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டும் ஒப்பந்தம், 861 கோடி ரூபாய்க்கு, 'டாடா' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

டில்லியில், தற்போது உள்ள பார்லிமென்ட் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. கடந்த, 1921ல் துவங்கிய இக்கட்டட பணிகள், ஆறு ஆண்டுகளில் முடிவடைந்தன.
அதன் பின், இடப்பற்றாக்குறை காரணமாக, 1956ல், புதிதாக இரண்டு தளங்கள் சேர்க்கப்பட்டன.தற்போதுள்ள பார்லி., கட்டடம் வலுவிழந்து வருவதால், அதன் அருகிலேயே, புதிய கட்டடம் கட்ட, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு முடிவு செய்தது. புதிய கட்டட கட்டுமானத்துக்கு, 940 கோடி ரூபாய் செலவாகும் என, மத்திய அரசு மதிப்பிட்டு இருந்தது.
இந்த புதிய கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்த புள்ளியை, மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு முன்னணி கட்டுமான நிறுவனங்களும், ஒப்பந்த புள்ளி கோரின. இவற்றை மத்திய பொதுப்பணித்துறை நேற்று பரிசீலித்தது.

'லார்சன் அண்டு ட்யூப்ரோ' நிறுவனம், 865 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் கோரி இருந்தது. அதைவிட குறைவாக, 'டாடா' நிறுவனம், 861.90 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரி இருந்ததால், புதிய பார்லி., கட்டுமான பணிக்கான ஒப்பந்தம், 'டாடா' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
முக்கோண வடிவத்தில் கட்டப்படவுள்ள புதிய பார்லி., வளாகத்தின் கட்டுமானப் பணி, ஒரு ஆண்டில் முடிவடையும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை