கார், பஸ், ஆட்டோக்களை பிடித்து 400 கி.மீ பயணித்து ‘நீட்’ எழுதிய மாணவி : 10 மணி நேரம் தொடர்ந்து பயணம்

தினகரன்  தினகரன்
கார், பஸ், ஆட்டோக்களை பிடித்து 400 கி.மீ பயணித்து ‘நீட்’ எழுதிய மாணவி : 10 மணி நேரம் தொடர்ந்து பயணம்

மும்பை, : மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடந்தது. மையங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், மாணவர்கள் மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்று தொலைதூரத்திலிருந்து சென்று தேர்வெழுதினர். அதன்படி, மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஏஞ்சல் கவிட் என்ற மாணவி, மும்பைக்கு கார், பஸ், ஆட்டோ என, 400 கிலோமீட்டர் பயணம் செய்து தேர்வெழுதினார். முன்னதாக சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தனது சகோதரி மற்றும் நண்பருடன் வீட்டிலிருந்து மும்பைக்கு புறப்பட்டார். இதற்காக 13 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்தார். ஏழு மணி நேர பயணத்தை முடித்த அவர், அதிகாலை 4 மணிக்கு தானேவில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டை அடைந்தார். சிறிது ஓய்வுக்குப் பிறகு, தானேவிலிருந்து போரிவலிக்கு பேருந்தில் பயணம் செய்தார். இரண்டு மணி நேரம் பயணத்திற்கு பிறகு, அங்கிருந்து ஆட்டோ பிடித்து தேர்வு மையம் உள்ள தாகூர் கல்லூரியை அடைந்தார். கிட்டதிட்ட 10 மணி நேரம் வாகன பயணங்களில் ெசன்றுள்ளார். தாகூர் கல்லூரி மையமானது, மும்பையின் மிகப்பெரிய நீட் தேர்வு மையங்களில் ஒன்றாகும். இங்கு சுமார் 1200 மாணவர்கள் ேதர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், பெற்றோர், மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. தேர்வு அறையின் ஒவ்வொரு அறையிலும் 12 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். எப்படியோ தனது தேர்வு அறையை கண்டறிந்து, மாணவி ஏஞ்சல் கவிட், நீட் தேர்வை எழுதியுள்ளார். 400 கிலோ மீட்டர் தூரம் பல நெருக்கடிகளை சந்தித்து தேர்வெழுத வந்த மாணவியை பலரும் பாராட்டினர். மகாராஷ்டிராவில் 2.28 லட்சம் பேர் சுமார் 615 மையங்களில் நீட் தேர்வை எழுதினர்.

மூலக்கதை