திருச்சூரில் தங்கராணி ஸ்வப்னாவின் நெஞ்சுவலி நாடகம் அம்பலமானதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்!!

தினகரன்  தினகரன்
திருச்சூரில் தங்கராணி ஸ்வப்னாவின் நெஞ்சுவலி நாடகம் அம்பலமானதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்!!

திருவனந்தபுரம்:  திருச்சூரில் தங்கராணி ஸ்வப்னாவின் நெஞ்சுவலி நாடகம் அம்பலமானது. அவருக்கு மருத்துவ குழுவினர் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய முயன்றதால், அலறிய ஸ்வப்னா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக பெயரில் தங்க கடத்தலில் ஈடுபட்ட ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விசாரணையின்போது தினந்தோறும் புதுப்புது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஒரு வாரத்திற்கு முன்பு அவர் திருச்சூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு இ.சி.ஜி., எக்கோ போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதில் நெஞ்சுவலிக்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எனவே அவரை மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய மருத்துவர்கள் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறி, ஸ்வப்னா மருத்துவமனையிலேயே இருக்க முயன்றார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் ஸ்வப்னாவுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்காக மருத்துவ குழுவினர் ஸ்வப்னாவை சந்தித்து பரிசோதனைக்கு ஆயத்த நிலையில் இருக்கும்படி கூறினர். அப்போது அலறிய ஸ்வப்னா தனக்கு தொடர்ந்து நெஞ்சுவலி இல்லை என்கிறார். அவ்வப்போது வருவதாக கூறி, தற்போது ஆஞ்சியோ டெஸ்ட் தேவையில்லை என கூறினார். இதனையடுத்து அவரது நெஞ்சுவலி நாடகம் அம்பலமானது. மேலும் சிறையிலிருந்து வெளியேறுவதற்காக அவர் இவ்வாறு நாடகமாடி உள்ளதாக சிறைத்துறை நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ஸ்வப்னா மீண்டும் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை மற்றவர்கள் சந்திக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், ஸ்வப்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 6 பெண் காவலர்கள் அவருடன் போட்டோ எடுத்துள்ளனர். அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் ஆணையர் சம்மன் அனுப்பினார். பின்னர், விசாரணைக்கு வந்த காவலர்களை ஆணையர் எச்சரித்து அனுப்பினார். இதனையடுத்து, ஸ்வப்னாவின் செல்போன் மற்றும் லேப்டாப்பை என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஏற்கனவே ஒரு அமைச்சருடன் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு அமைச்சருடன் தொடர்பு  இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை