‘சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்’; ஜனவரி 27ம் தேதி சசிகலா ரிலீஸ்?..கர்நாடக சிறை துறை தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்’; ஜனவரி 27ம் தேதி சசிகலா ரிலீஸ்?..கர்நாடக சிறை துறை தகவல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் தண்டனை முடிந்து வரும் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு சிறையில் இருந்து 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு என்று வெளியான தகவலுக்கு சிறைத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச-ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னையில் நடந்து வந்தநிலையில் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்வதால், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோரி திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை பெங்களூருக்கு கடந்த 2004ம் ஆண்டு மாற்றம் செய்தது. கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

சுமார் பத்து ஆண்டுகள் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட நான்கு பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததுடன் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ. 10 கோடி அபராதம் விதித்தார்.

அபராதம் செலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார்.

தனிநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய நீதிபதி என். கே. குமாரசாமி கடந்த 2015 மே 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, நான்கு பேரையும் நிரபராதிகள் என்று தீர்மானித்து விடுதலை செய்தார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், நான்கு பேரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் என தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதை தொடர்ந்து ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், மற்ற மூன்று பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா குறித்து சில விளக்கங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி. நரசிம்மமூர்த்தி கேட்டார்.

அதில், சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பி 21. 9. 2019ல் ஆர்டிஐ சட்டத்தில் விண்ணப்பித்தார். அதற்கு பதில் கொடுக்காததால் 22. 10. 2019ல் மேல்முறையீடு செய்துள்ளார்.

அதற்கும் பதில் கொடுக்கவில்லை. 13. 12. 2019ல் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதுவும் நிலுவையில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியபின் எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார் என்ற தகவல் கொடுக்ககோரி 30. 6. 2020ல் விண்ணப்பித்தார்.

அதற்கும் பதில் ெகாடுக்காததால் 4. 8. 2020ல் மேல் முறையீடு செய்துள்ளார். குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை இதுவரை சிறையில் யார் யார் சந்தித்து பேசியுள்ளார்கள் என்பதற்கான டைரி நகல் வழங்கும்படி 22. 6. 2020 அன்று விண்ணப்பித்தார்.

அதற்கு பதில் கொடுக்காததால் 4. 8. 2020 அன்று மேல்முறையீடு செய்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்ற விவரம் கேட்டு 22. 6. 2020ல் விண்ணப்பித்தும் பதில் கொடுக்காததால் 11. 8. 2020 அன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்தபின் இதுவரை எத்தனை நாட்கள் சிறையில் உள்ளார் என்ற விவரம் கேட்டு 30. 6. 2020ல் விண்ணப்பித்தும் பதில் ெகாடுக்காததால் 4. 8. 2020ல் மேல் முறையீடு செய்துள்ளார்.

மேலும் சிறையில் உள்ள சசிகலா எந்த நாளில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுவார் என்று கேட்டு கடந்த 4. 8. 2020ம் தேதி ஆர். டி. ஐ. சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவரின் கேள்விக்கு சிறை துறை அளித்துள்ள பதிலில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, வரும் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை ரூ. 10 கோடி செலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்.

அதன்படி 2022 பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறைத்துறை அளித்துள்ள தகவலின்படி சசிகலா முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு சிறைத்துறை அளித்துள்ள தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சசிகலாவை மத்திய அரசு முன் கூட்டியே விடுதலை செய்கிறது.

அதிமுகவை ஒன்றிணைத்து பாஜக கூட்டணி அமைக்கிறது என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் பரப்பிய வதந்தி, தற்போது ஆர்டிஐ அளித்துள்ள தகவலின்படி வதந்தியாகவே முடிவுக்கு வந்துள்ளது.

.

மூலக்கதை