கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கொரோனா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கொரோனா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்

சென்னை:  தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 3 நாட்கள் நடக்க உள்ள இந்த கூட்டத்தொடரில் கொரோனா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பிரச்னைகளை எழுப்ப திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளம் கூட்ட அரங்கத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்யப்பட்டது.

முதல் நாள் கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகன், வசந்தகுமார் எம்பி மற்றும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். 15ம் தேதி (செவ்வாய்) அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

16ம் தேதி (புதன்) முதல் துணை நிதிநிலை அறிக்கை (துணை பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும். தொடர்ந்து சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படுகிறது.

அத்துடன் 3 நாள் கூட்டத் தொடர் முடிவுக்கு வரும்.

முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்தான் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் தனபால் கூறி இருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு நேற்று காலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை முடிவில் தெரியவந்தது.

அதேநேரம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பொன். சரஸ்வதி மற்றும் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை  அளித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம்வைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதனுக்கும் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர், தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேபோன்று தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவும் நேற்று வெளியானது. இதில் பத்திரிகையாளர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்தது.

அதேநேரம், சட்டப்பேரவை செயலக ஊழியர் ஒருவருக்கும், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை மறுதினம் (15ம் தேதி) மற்றும் 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து பேச கவனஈர்ப்பு தீர்மானம் சபாநாயகர் தனபாலிடம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஒரு தனி தீர்மானமும் சட்டப்பேரவையில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தமிழகத்தில் கடந்த 5 மாதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள், செலவுகள், மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தி திணிப்பு, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்யும் விவகாரம், அரியர் மாணவர்கள் தேர்வில் உள்ள குளறுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியினர் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை