கனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு

தினமலர்  தினமலர்
கனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு

புதுடில்லி : சென்னை விமான நிலைய, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மீது, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி கூறிய குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட அதிகாரி மறுத்துள்ளார்.

தி.மு.க., -- எம்.பி., கனிமொழி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 'சென்னை விமான நிலையத்தில், ஹிந்தியில் பேசிய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரியிடம், ஹிந்தி தெரியாது என கூறினேன்; தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு தெரிவித்தேன்.

அதற்கு, நீங்கள் இந்தியரா என, அவர் கேள்வி எழுப்பினார்.'ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து நடைமுறையில் உள்ளது' என, அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியிடம், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியதாவது: பெண் அதிகாரியிடம் நடத்திய விசாரணையின் போது, அவர், கனிமொழியிடம், நீங்கள் இந்தியரா என்ற கேள்வியை கேட்கவில்லை என்றும், ஹிந்தியும் இந்திய அல்லது அதிகாரப்பூர்வ மொழி தானே என்று தெரிவித்ததாக கூறினார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பின், விமான நிலையங்களில், உள்ளூர் மொழி தெரிந்த அதிகாரிகளை, அதிக எண்ணிக்கையில் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை