ஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..!

தினமலர்  தினமலர்
ஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..!

கோல்கட்டா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த கல்லூரி ஒன்று, மாணவர் சேர்க்கைக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒருபுறம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக.31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பொருளாதார ரீதியாக சிக்கல்களை பெற்றோர்கள் எதிர்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க மேற்கு வங்க மாநிலம் நைஹாட்டியில் உள்ள ரிஷி பாங்கிம் சந்திரா கல்லூரி முன்வந்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்து பாடப்பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் உள்ளன.

இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சிப் சஹா மும்பை மிர்ரர் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம் போல் ரூ .60 ஆக இருக்கும். இருப்பினும், அனைத்து பட்டப்படிப்புக்களுக்கான சேர்க்கைக் கட்டணம் ஒரு ரூபாயாக இருக்கும். மாணவர்களுக்கான ஒரே நுழைவு கட்டணம் ஒரு ரூபாயை நிர்ணயிக்க கல்லூரி நிர்வாக குழு முடிவு செய்தது. கொரோனா தொற்று மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கட்டணம் அதிகமாக இருந்தால் பல திறமையான மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா தொற்று காரணமாக பல பெற்றோர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


இந்தாண்டு அனைத்து துறை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கட்டணம் ஒரு ரூபாயாக இருக்குமென்பதை கல்லூரி நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக, சி.பி.எஸ்.இ, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை