கொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை!: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

தினகரன்  தினகரன்
கொரோனாவை சமாளித்து பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க 3 நடவடிக்கைகள் தேவை!: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்து பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப இந்தியா உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். பி.பி.சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முதல்கட்டமாக மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்வதுடன் அவர்களிடம் வாங்கும் சக்தி இருப்பதை நேரடி பண உதவி மூலமாக உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.இரண்டாவதாக, அரசு உத்தரவாதத்துடனான கடன்கள் மூலமாக தொழில்களுக்கு தேவையான மூலதனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மூன்றாவதாக, நிறுவன சுயாட்சி மற்றும் நடைமுறைகள் மூலமாக நிதி துறையை சரி செய்ய வேண்டும் என்றும் மன்மோகன் சிங் கருத்து கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 1991ம் ஆண்டில் இந்தியா சந்தித்த பொருளாதார நெருக்கடி சர்வதேச காரணிகளால் ஏற்பட்டது என்றும், ஆனால் தற்போதைய நெருக்கடி இதன் முன் எப்போதும் ஏற்பட்டிராத அளவு பெரியது எனவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது உலக யுத்தம் கூட தற்போது ஏற்பட்டுள்ளதை போல உலகை முடக்கவில்லை என்று அவர் கருத்து கூறியுள்ளார். தொடர்ந்து, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு எப்போது சீரடையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மூலக்கதை