வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திட்டம் துவங்கியது: அறுவடை இழப்புகளை தடுக்க அதிரடி

தினகரன்  தினகரன்
வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திட்டம் துவங்கியது: அறுவடை இழப்புகளை தடுக்க அதிரடி

புதுடெல்லி: வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ், ரூ.1 லட்சம் கோடிக்கான விவசாய நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது, கிராமங்களில் அறுவடைக்கு பிந்தைய கட்டமைப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். வேளாண் அமைச்சகத்தின் ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்’ கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதி உதவி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி டெல்லியில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில்,  மோடி பேசியதாவது:நாடு முழுவதும் விவசாய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, கிராமங்களில் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும். சிறந்த சேமிப்பு கிடங்குகள், நவீன குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் கிராமங்களில் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரையில் உத்தரவாத கடனும் வழங்கப்படும். இதன்மூலம், வேளாண் பொருட்கள் வீணாகாமல் பாதுகாப்பதுடன் பொருளுக்குண்டான தகுதியான விலைக்கும் விவசாயிகளால் விற்க முடியும்.மேலும் கிராமங்களில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். கிராமங்களில் சேமிப்பு கிடங்குகளும், வேளாண் தொழில்துறையும் அமைவதற்கு அத்தியாவசிய பொருட்கள் தடை சட்டம் காரணமாக இருந்தது. வேளாண் துறையில் மோசமான முதலீடுக்கும், மறுக்கப்பட்ட முதலீட்டுக்கும் இச்சட்டமே காரணம். தற்போது நம் விவசாயிகள் தேவைக்கு அதிகமாகவே விளைபொருட்களை விளைவிக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடுகள் இருப்பதால் அவர்களால் அதிகளவில் சேமித்து வைக்க முடியாது. இனியும் இந்த சட்டம் தேவையில்லை. இந்த சட்டத்தை வைத்து முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் பயமுறுத்தப்பட்டனர். அதிலிருந்து அவர்கள் தற்போது விடுபட்டுள்ளனர்.புதிய நிதியத்தின் கீழ் கடன் வசதிகளை பெற்று அவர்கள் கிராமங்களில் நவீன வேளாண் உள்கட்டமைப்புகளை அமைத்துக் கொள்ளலாம். அதுதவிர, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிக்களை தாண்டி விற்பனை செய்யவும், நேரடியாக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து விளைபொருட்களை விற்கவும் வகை செய்யும் 2 அவசர சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வேளாண் அல்லாத துறைகள் தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்கும் போது ஏன் விவசாயிகளால் முடியாது? அவர்களுக்கு மட்டும் அந்த சுதந்திரம் இல்லையா? மற்ற துறைகளில் இடைத்தரகர்கள் இல்லாதபட்சத்தில் வேளாண் துறையில் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? நகரத்தில் உள்ள சோப்பு தொழிற்சாலை தனது தயாரிப்பை நாடு முழுவதும் விற்பது போல, விவசாயமும் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.* ரூ.17,000 கோடி நிதி உதவிஇந்நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 6வது தவணையாக நாடு முழுவதும் 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி நிதி உதவி வழங்குவதையும் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு ரூ 75,000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.* சென்னை - அந்தமான் இடையே கடலுக்கடியில் ஆப்டிக்கல் கேபிள்அந்தமான் நிக்கோபரில் உள்ள தீவுகளுக்கு சென்னையில் இருந்து கடலுக்கடியில் ஆப்டிக்கல் பைபர் கேபிள் அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, அந்தமான் பாஜ நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று உரையாடிய பிரதமர் மோடி, ‘‘உலகளாவிய கடல் வர்த்தகத்தின் முக்கிய மையமாக அந்தமான் நிக்கோபர் தீவுகள் மாற இருக்கின்றன. இப்பிராந்தியத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.

மூலக்கதை