ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்: ஸ்டாலின்

சென்னை : 'கேரளாவில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அம்மாநில அரசு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கேரள மாநிலம், மூணாறு அருகேயுள்ள, ராஜமாலா பகுதி தேயிலை தோட்டத்தில் வேலை செய்த, தமிழக தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களில், 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்வதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அந்தத் தொழிலாளர்கள் அனைவரும், தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர்களை பறிகொடுத்து, அங்கு செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண்கலங்கி தவிக்கின்றனர். ஆகவே, நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு செல்வதற்கு உரிய, 'இ - பாஸ்' வாகன வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க, கேரள அரசுடன், தமிழக அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடவும், தமிழக அரசின் சார்பிலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கவும், முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயன், தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டு தொகையை அதிகரித்து, உயிரிழந்தோர் குடும்பம் ஒன்றிற்கு, தலா, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மண்ணில், புதைந்து கிடக்கும் அனைவரையும், விரைந்து மீட்டிட, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை