புதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின்

தினமலர்  தினமலர்
புதிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்க :ஸ்டாலின்

சென்னை,:'தேசிய கல்வி கொள்கையை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தேசிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க, ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்கப்பட்டு இருப்பது, நம் ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டின் மதிப்பை குறைப்பதாக உள்ளது.தமிழ் கற்பதை கட்டாயமாக கொண்ட இரு மொழிக்கொள்கை, தமிழகத்தில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அது நல்ல முன்னேற்றத்தையும் அடைந்துள்ளது.கல்லுாரி நுழைவு தேர்வுகள், மாணவர்களுக்கு பாகுபாட்டை காட்டும். தேசிய கல்வி கொள்கையில், தொழிற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாக உள்ளது.

எனவே, நம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள, குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்; விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய வேண்டும்.அதற்கு, மாநிலங்கள் மற்றும் மத்தியில் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் பங்கேற்பதற்கான, ஓர் ஆலோசனையை செயல்முறையை மீண்டும் நிறுவ வேண்டும். தேசிய கல்வி கொள்கை - 2020 ஐ மறுவடிவமைக்க வேண்டும்.நம் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள, உரிய செயல்முறைகளை பின்பற்றுவதற்கு, உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை, தேசியக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தும் முடிவை, நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூலக்கதை