மென்மையான ஹிந்துத்வா:ராமர் கோவில் விவகாரத்தில் காங்.பல்டி.!

தினமலர்  தினமலர்
மென்மையான ஹிந்துத்வா:ராமர் கோவில் விவகாரத்தில் காங்.பல்டி.!

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது, விவாத பொருளாகி உள்ள நிலையில், பெரும்பான்மை ஹிந்துக்களின் ஆதரவை பெறுவதற்காக, மென்மையான ஹிந்துத்வா போக்கை, காங்கிரஸ் கடைப்பிடிக்க துவங்கி இருப்பது, அரசியல் ரீதியாக, அக்கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராம ஜென்மபூமி, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, பசு வதை ஆகிய விவகாரங்களில், பா.ஜ., மற்றும் அதன் துணை அமைப்புகளின் நிலைப்பாடு, எப்போதும் தீவிரத் தன்மையுடனும், ஒரே தெளிவுடனும் இருந்து வருகிறது.



ஆதரவு கருத்துகள்



காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும், இந்த விவகாரங்களில், தெளிவற்ற, குழப்பமான அணுமுறைகளையே கடைப்பிடித்து வருகிறது.சிறுபான்மையினரை திருப்திபடுத்த வேண்டும்; அதே நேரத்தில், மென்மையான ஹிந்துத்வா கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற, இரு வேறு நிலைக்கு இடையே சிக்கி, ஊசலாடி வருவதை, பல்வேறு சந்தர்ப்பங்கள் உணர்த்தியுள்ளன. ராமர் கோவில், பூமி பூஜைக்கு முன்னதாக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா மற்றும் காங்.,கைச் சேர்ந்த, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரது ஆதரவு கருத்துகள், இதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.'

ராமர் அனைவருக்குமானவர். அவரது அருளால், நாட்டில் தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ஒருங்கிணைப்பு ஓங்க வேண்டும்' என, பிரியங்கா கூறினார். பூமி பூஜைக்கு முந்திய நாள், ம.பி., முன்னாள் முதல்வர் கமல்நாத், தன் இல்லத்தில், 'ஹனுமான் சாலீசா' வாசித்தது, அனைத்து ஊடகங்களிலும் செய்தியானது.



கடும் எதிர்ப்பு'



ம.பி.,யின், 24 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 'எனவே, இது போன்ற மென்மையான ஹிந்துத்வா ஆதரவு நிலைப்பாடு, காங்.,குக்கு மக்கள் ஆதரவை அதிகரிக்கும்' என, அக்கட்சி நம்புவதையே, இது போன்ற நடவடிக்கைகள் உணர்த்துவதாக, அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, இது போன்ற நடைமுறைகள் புதிதல்ல. '1985ல், ஷா பானு என்ற இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து வழக்கில், அவரது கணவர், ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுக்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம்களின் ஓட்டுகளை இழக்கக் கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் ராஜிவ், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, பார்லிமென்டில்சட்ட திருத்தம் கொண்டு வந்து, முஸ்லிம்கள் தனி சட்டத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

இது, ஹிந்துக்களின்எதிர்ப்பை சம்பாதிக்கும் என,அருண் நேரு போன்ற மூத்த தலைவர்கள் ராஜிவை எச்சரித்தனர். இதையடுத்து, ஹிந்துக்களை சமாதானப்படுத்த, பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த பாபர் மசூதியை திறந்து, உள்ளே வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு, பூஜைகள் மேற்கொள்ள, ராஜிவ் வழி செய்தார்.சமரசங்கள் ராஜிவின் இந்த ஒற்றை முடிவு காரணமாக, ராமர் கோவில் கட்டும் கோரிக்கையை, மிகப் பெரிய மக்கள் இயக்கமாக, விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னெடுத்தது.

இதன் பின், வங்கதேசத்தில் இருந்து, இந்தியாவில் தஞ்சம் கேட்டு வந்த, எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விரட்டப்பட்டது, எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டது என, அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களில், ராஜிவ் சமரசங்கள் செய்து கொண்டார்.இந்த குழப்பமான நிலைப்பாடுகள், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என, இரு சமூக மக்கள் மத்தியிலும், காங்.,குக்கு இருந்த நன்மதிப்பை படிப்படியாக குறைத்தன.இதன் உச்சகட்டமாக, 2014 லோக்சபா தேர்தலில்,காங்., தோல்வி அடைந்த பின், குஜராத் சட்டசபை தேர்தல் வந்தது. அப்போது, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு, ராகுல் கோவிலுக்கு சென்றார். இதன் வாயிலாக, காங்.,கின் மென் ஹிந்துத்வா கொள்கை, மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும், இந்த மென்மையான ஹிந்துத்வா கொள்கை, காங்.,குக்கு கை கொடுக்கவில்லை.



கடந்த இரண்டு லோக்சபா தேர்தலிலும், அவர்கள் படுதோல்வியை தழுவினர். அதிரடியான ஹிந்துத்வா கொள்கைக்கு ஆதரவாகவே, மக்கள் ஓட்டளித்தனர்.காங்.,கின் மென் ஹிந்துத்வா போக்கால், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், பெரும்பான்மை சமூகத்தினரும், அக்கட்சியை அன்னியமாக உணரத் துவங்கி உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கூடும் பா.ஜ., பலம்



கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வாக்குறுதி, தவறாமல் இடம்பெற்று வருகிறது. அது தற்போது நிறைவேறியுள்ளது. இதனால், உ.பி.,யில், பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதோடு, 2022ல் நடைபெறவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலில், மக்கள் ஆதரவு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்டுகிறது.மேலும், 2024 லோக்சபா தேர்தலில், குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை ஆகியவற்றுடன் சேர்த்து, ராமர் கோவில் வாக்குறுதியை நிறைவேற்றியது, பா.ஜ.,வின் பலத்தை அதிகரிக்கும் என, கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


மூலக்கதை